தேடுதல்

இந்தோனேசியாவில் ரமதான் இந்தோனேசியாவில் ரமதான்  (ANSA)

போரை அழிக்கவும் அமைதியை ஏற்றவும் கிறிஸ்தவரும் இஸ்லாமியரும்

ஆயுதங்களால் மக்கள் துன்பங்களை அனுபவிக்கும்போது, மறுபுறமோ, ஆயுதங்களால் வரும் பொருளாதார இலாபத்தைக் குறித்து மகிழ்ச்சியடைபவர்களும் உள்ளார்கள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இஸ்லாமியர்கள் உலகம் முழுவதும் சிறப்பிக்கும் ரமதான் மாதத்திற்கும், அவர்களின் Id al-Fitr விழாவுக்கும் கத்தோலிக்க சமுதாயத்தின் வாழ்த்துகளைத் தெரிவித்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது மதங்களிடையே உறவுகளுக்கான திருப்பீடத்துறை.

வாழ்த்துக்களை வெளியிடும் இவ்வேளையில், இன்றைய உண்மை நிலைகளையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும் என அச்செய்தியில் கூறும் திருப்பீடத்துறை, நாடுகளிடையே ஆயுத மோதல்கள், குழுக்களிடையே முரண்பாடுகள், குற்றக் கும்பல்கள், ஆயுதம் ஏந்திய குழுக்கள் போன்றவைகளால் உலகம் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

‘போர் என்னும் தீயை அணைப்பதிலும், அமைதி திரியை ஏற்றுவதிலும் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த செய்தி, மூன்றாம் உலகப்போர், பகுதி பகுதியாக இந்த உலகில் தொடர்ந்து இடம்பெற்றுவருகிறது என்ற திருத்தந்தையின் வார்த்தைகளையும் சுட்டிக்காட்டியுள்ளது.

பிறரை அடக்கியாள முயலும் மனிதனின் பேராசை, அரசியல் மற்றும் பொருளாதார ஆசைகள், ஆயுத உற்பத்தியும் வியாபாரமும் என பல்வேறு காரணங்களை இன்றைய உலகின் மகிழ்ச்சியின்மைக்குக் காரணமாகக் காட்டும் திருப்பீடத்துறையின் செய்தி, ஆயுதங்களால் மக்கள் துன்பங்களை அனுபவிக்கும்போது, மறுபுறமோ, ஆயுதங்களால் வரும் பொருளாதார இலாபத்தைக் குறித்து மகிழ்ச்சியடைபவர்களும் உள்ளார்கள் என குறிப்பிடுகிறது.

இத்தனை முரண்பாடுகள் மற்றும் துன்பங்களின் மத்தியிலும், அமைதியை ஊக்குவிப்பதற்கான மத வளங்கள் இவ்வுலகில் உள்ளன என்பதை சுட்டிக்காட்டும்

திருப்பீடத்துறையின் செய்தி, பல இலட்சக்கணக்கான மக்கள் போரால் குடிபெயரும் நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதையும் எண்ணிப் பார்க்க அழைப்புவிடுக்கிறது.

மனித வாழ்வு புனிதமானது, அது மதிக்கப்படுவதற்கும் பாதுகாக்கப்படுவதற்கும் தகுதியுடையது என்பதை மனதில் கொண்டவர்களாக, நாமனைவரும் ஒன்றிணைந்து, பகைமையின் நெருப்பை அணைத்து, அமைதியின் மெழுகுதிரிகளை ஏற்றுவோம் என்ற அழைப்பையும் தன் செய்தியில் விடுத்துள்ளது மதங்களிடையே உரையாடலுக்கான திருப்பீடத்துறை.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 March 2024, 15:19