தேடுதல்

திருத்தந்தையுடன் கர்தினால் சில்வானோ மரிய தொமாசி திருத்தந்தையுடன் கர்தினால் சில்வானோ மரிய தொமாசி 

தற்காப்புக்கான போர்கள் என்பவை புதிய கேள்விகளுக்கு வழிவகுக்கின்றன

மக்களைக் காப்பாற்றுகிறோம் என்ற உரிமையைப் பேசி, எண்ணற்ற மக்களையும் சுற்றுச்சூழலையும் அழித்துக் கொண்டேச் சென்றால் எங்குச் சென்று முடியப் போகிறோம்?

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

ஆயுதக்களைவு பற்றிய முரண்பட்டக் கருத்துக்களால்  ஆயுதக் களைவின்மையின் விளைவுகள் மிகவும் ஆபத்து நிரம்பியதாக இருக்கும் எனவும், ஆணுஆயுதங்களின் பயன்பாடு இவ்வுலகையே பாலைவனமாக மாற்றிவிடும் எனவும் அச்சத்தை வெளியிட்டுள்ளார் கர்தினால் சில்வானோ மரிய தொமாசி.

ஜெனிவாவிலுள்ள ஐ.நா. அமைப்புகளுக்கான திருப்பீடப் பிரதிநிதியாக பணியாற்றியுள்ள கர்தினால் தொமாசி அவர்கள், வத்திக்கான் செய்திகளுக்கு வழங்கிய நேர்முகத்தின்போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளதுடன், இன்றைய உலகின் காலநிலை மாற்றங்கள் என்னும் அச்சுறுத்தல், மற்றும் பரவலான மோதல்கள் மத்தியில், தற்காப்பிற்கான உரிமைகள் குறித்த கேள்வி பற்றியும் தன் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

பொதுமக்களுக்கு பெரும் துன்பங்களையும் சுற்றுச்சூழலுக்கு பெரும் அழிவையும் கொணரும் அணுஆயுதங்கள் எச்சூழலிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை எனக்கூறிய கர்தினால், இன்றைய உலகில் மனிதகுலத்தின் மனச்சான்றாக அமைதிக்கு தொடர்ந்து குரல் கொடுத்துவரும் திருத்தந்தை ஆற்றிவரும் பணிகளையும் சுட்டிக்காட்டினார்.

வன்முறைகள் பேரழிவைக் கொணர்ந்தாலும், அணுஆயுதங்களின் விளைவுகள் அதைவிட மிகவும் கேடு நிறைந்தவை என்பதையும் சுட்டிக்காட்டிய கர்தினால் தொமாசி அவர்கள், இது குறித்து மக்களுக்கு கல்வி புகட்ட வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.

இன்றைய உலகில், குறிப்பாக உக்ரைனிலும் காசா பகுதியிலும் இடம்பெறும் போர்கள் தற்காப்புக்காக நடத்தப்படுபவை என கூறப்பட்டுவருவது புதிய கேள்விகளுக்கு வழிவகுக்கிறது எனவும் எடுத்துரைத்தார் கர்தினால் தொமாசி.

மக்களைக் காப்பாற்றுகிறோம் என்ற உரிமையைப் பேசி, எண்ணற்ற மக்களையும் சுற்றுச்சூழலையும் அழித்துக் கொண்டேச் சென்றால் இவர்கள் பாதுகாப்பதற்கென எவரும் இருக்க மாட்டார்கள் என்ற கவலையையும் தன் நேர்முகத்தின்போது வெளியிட்டார் கர்தினால்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 March 2024, 15:50