தேடுதல்

உலக ஆயர்கள் மாமன்ற கலந்துரையாடல் 2024 (கோப்புப்படம்) உலக ஆயர்கள் மாமன்ற கலந்துரையாடல் 2024 (கோப்புப்படம்)   (ANSA)

பெண்கள் மற்றும் ஒருங்கிணைந்த பயணம் குறித்த இணையதள படிப்பு

இந்த வலைபக்கத் தொடர்கள் திருஅவையின் ஒருங்கிணைந்த பயண முறையின் பயன்பாட்டை ஊக்குவிக்கும், குறிப்பாக, பெண்களின் முழு பங்கேற்பில் கவனம் செலுத்தும்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

பிப்ரவரி 27, இச்செவ்வாயன்று, கத்தோலிக்கப் பெண்களுக்கான அனைத்துலக அமைப்பு (WUCWO), ‘திருஅவையின் ஒருங்கிணைந்த பயணத்தில் பெண்களின் பணி’ என்ற தலைப்பில் புதியதொரு வலைபக்கத் தொடர்களை அறிமுகப்படுத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இது கத்தோலிக்கப் பெண்களுக்கான அனைத்துலக அமைப்பினால், அதன் உலக மகளிர் கண்காணிப்பகம் வழியாக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு புதிய முயற்சி என்றும், இந்தத் திட்டம் பிப்ரவரி 27 முதல் 29 வரை ஸ்பானிஷ், ஆங்கிலம் மற்றும் பிரஞ்சு மொழிகளில் தொடர்ச்சியான வலைபக்கத் தொடர்களாகத் தொடங்கும் என்றும் அச்செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த பயண செயல்முறையின் முன்னேற்றம் மற்றும் உலக ஆயர்கள் மாமன்றத்தின் முதல் அமர்வில் தொகுப்பு அறிக்கையின் பிரிவு 9-இன்கீழ் அமைந்துள்ள, 'திருஅவையின் வாழ்க்கை மற்றும் பணியில் பெண்கள்' என்ற தலைப்பின் அடிப்படையில் இந்த வலைப்பக்கத் தொடர்கள் அமையும் என்றும் அச்செய்திக்குறிப்பு குறிப்பிடுகின்றது.

இந்தக் கூட்டங்கள் ஒவ்வொன்றிலும், அக்டோபர் 2023-இல் நிகழ்ந்த உலக ஆயர்கள் மாமன்றத்தின் 16-வது சாதாரண பொதுச் சபையில் பங்கேற்ற இரண்டு பேச்சாளர்கள் இருப்பார்கள் என்றும், அவ்விருவரில் ஒருவர் பொதுநிலையினர், மற்றொருவர் துறவு சபையைச் சேர்ந்தவர் என்றும், அச்செய்திக் குறிப்பு மேலும் கூறுகின்றது.

இலவசமாக பதிவு செய்ய : https://www.wucwo.org/index.php/en/training/formation/2123-wucwo-s-school-for-synodality என்ற இணையதள முகவரியும் அச்செய்திக் குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 February 2024, 14:15