தேடுதல்

கர்தினால் மரியோ கிரேக். கர்தினால் மரியோ கிரேக்.  

நட்புணர்வு மற்றும் ஒற்றுமையை வளர்க்கும் செவிசாய்த்தல்

நற்செய்தியின் மகிழ்ச்சி நம் மனங்களிலும் செயல்களிலும் இருக்கவேண்டும். இம்மகிழ்ச்சியானது நற்செய்தியைக் கேட்பதிலும் எடுத்துரைப்பதிலும் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

செவிசாத்தல் அனுபவம் நமது தனிமை உணர்வை வெல்லும் என்றும், மக்கள் நம் குரலுக்கு செவிசாய்க்க கொடுக்கும் நேரம், முயற்சி, போன்றவை நட்புணர்வை ஒற்றுமையை நம்மில் வளர்க்கின்றன என்றும் கூறினார் கர்தினால் மரியோ கிரேக்.

சனவரி 19 வெள்ளிக்கிழமை பிலிப்பீன்ஸில் நடந்த புதிய நற்செய்தி அறிவிப்பு பேராயத்தின் உறுப்பினர்களுக்கு வழங்கிய உரையில் இவ்வாறு கூறியுள்ளார் உலக ஆயர்கள் மாமன்றத்தின் தலைமைச் செயலரான, கர்தினால் மாரியோ கிரெக் (Mario Grech) .

கடந்த அக்டோபரில் உரோம் நகரில் நடைபெற்ற 16வது உலக ஆயர்கள் மாமன்றத்தில் பங்கேற்ற தனது அனுபவங்களை அனைவரிடமும் மகிழ்வுடன் பகிர்ந்து கொண்ட கர்தினால் கிரேக் அவர்கள், வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில், வட்ட மேசைமுறையில் நடைபெற்ற கலந்துரையாடல், தூய ஆவியின் செயல்பாட்டால் நடந்த உடையாடல்கள் மற்றும் செயல்திட்டங்கள், ஆயர்கள் மற்றும் ஆயரல்லாதவர்களின் பங்கேற்பு குறித்தும் எடுத்துரைத்தார்.

உள்ளூர் தலத்திருஅவையில் உள்ள இளைஞர்களுடன் சிறந்த ஈடுபாடு, அருளடையாள வாழ்க்கை, மறைப்பணி முயற்சிகள் தேவை, இயற்கைப் பாதுகாப்பு, போன்ற பல கருத்துக்கள் தங்களது அமர்வில் எடுத்துரைக்கப்பட்டதாக கூறிய கர்தினால் கிரேக் அவர்கள், உலகளாவிய திருஅவையின் எதிர்கால தலைமைத்துவம் இளைஞர்கள் என்றும் அத்தகைய இளைஞர்களில் பெரும்பான்மையானோர் ஆசியாவில் வாழ்கின்றனர் என்றும் தெரிவித்தார்,

மேலும், நற்செய்தியின் மகிழ்ச்சி நம் மனங்களிலும் செயல்களிலும் இருக்கவேண்டும் என்றும், இம்மகிழ்ச்சியானது நற்செய்தியைக் கேட்பதிலும் எடுத்துரைப்பதிலும் நிறைவு பெற்றிருக்க வேண்டும் என்றும் கூறினார் கர்தினால் மரியோ கிரேக்.

2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற உள்ள உலக ஆயர்கள் மாமன்றத்தின் நிறைவுப் பகுதியானது திருஅவையில் நாம் எப்படி வாழ்வது என்பது பற்றிய நமது புரிதல் மற்றும் அனுபவத்தை ஆழப்படுத்தும் காலமாக இருக்கும் என்றும் உள்ளுர் தலத்திருஅவைகளில், அனைத்து இறைமக்களையும் உள்ளடக்கிய திருஅவையின் பணிக்கான பொறுப்பான அணுகுமுறையை நோக்கி நடைமுறை நடவடிக்கைகளில் பணியாற்ற ஊக்குவித்தார் .

மேலும் பூமியின் அழுகை மற்றும் ஏழைகளின் அழுகைக்கு பதிலளிக்கும் வகையில் நம் மனசாட்சியை நாம் கூர்மைப்படுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்ட கர்தினால் கிரேக் அவர்கள், "ஏழைகளுடன் நிற்பது நமது பொதுவான வீட்டைக் கவனித்துக்கொள்வதில் அவர்களுடன் ஈடுபடுவது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 January 2024, 13:51