தேடுதல்

குழந்தைகளுடன் திருத்தந்தை குழந்தைகளுடன் திருத்தந்தை  (ANSA)

சிறாரைப் பாதுகாக்கும் திட்டங்களுக்கென திருப்பீட அவையின் நிதி

சிறாரை பாதுகாக்கும் பல்வேறு திட்டங்களை தலத்திருஅவைகள் வழி எடுத்து நடத்துவதற்கு நிதி வழங்கி உதவ உள்ளது சிறார் பாதுகாப்பிற்கான திருப்பீட அவை.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

உலகம் முழுவதும், குறிப்பாக வளர்ந்துவரும் நாடுகளில் சிறாரைப் பாதுகாக்கும் திட்டங்களுக்கென இரண்டு இலட்சத்து 30 ஆயிரம் யூரோக்களை ஒதுக்கியுள்ளது, சிறார் பாதுகாப்பிற்கான திருப்பீட அவை.

உலகின் தென்பகுதியில் உள்ள தலத்திருஅவைகளில்  சிறாரைப் பாதுகாக்கும் திட்டங்கள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படுவதற்கு இத்தொகை உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலத்திருஅவைகளுடன் இணைந்து பணியாற்ற, சிறார் பாதுகாப்பிற்கான திருப்பீட அவை எடுத்துவரும் பல்வேறு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்நிதி ஒதுக்கீடு இடம்பெற்றுள்ளது.

தவறான நடவடிக்கைகளால் சிறார் பாதிக்கப்படாதிருக்க, தடுப்புத் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்துதல், அத்துமீறல் நடவடிக்கைகள் குறித்து புகாரளிக்கப்பட்ட பின்னர் உடனடியாக அதற்கு இயைந்தவகையிலும், திருஅவைச் சட்டத்தின்படியும் பதிலுரைக்கப்படல் போன்றவை குறித்தும் சிறார் பாதுகாப்பிற்கான திருப்பீட அவையின் அறிக்கைத் தெரிவிக்கிறது.

சிறார் பாதுகாப்பிற்கான திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் Seán O'Malley அவர்களின் கூற்றுப்படி, உலகின் எல்லாப் பகுதிகளிலும் சிறார் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஊக்கம் வழங்கவேண்டும் என்ற திருத்தந்தையின் விருப்பத்திற்கு இயைந்தவகையில் இந்த நிதியுதவி ஒதுக்கப்பட்டுள்ளது. 

சிறார்க்கான பாதுகாப்பு மையம் ஒன்று பராகுவாய் தலைநகரில் துவக்கப்பட்டுள்ள நிலையில், பானமாவில் திருஅவை அதிகாரிகளுக்கான பயிற்சித் திட்டங்கள், மேற்கு மற்றும் கிழக்கு ஆப்ரிக்காவின் ஆயர் பேரவைகள் வழி பயிற்சி பாசறைகளை அமைத்தல், மௌரீசியஸ் நாட்டில் கருத்தரங்களை நடத்துதல் என, இதுபோன்ற பல்வேறு திட்டங்களை தலத்திருவைகள் வழி நடத்துவதற்கு நிதி வழங்கி உதவ உள்ளது சிறார் பாதுகாப்பிற்கான திருப்பீட அவை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 December 2023, 16:19