தேடுதல்

வத்திக்கான் வளாகத்தில் கிறிஸ்துபிறப்பு குடில்

800 ஆண்டுகளுக்கு முன்பு முதன் முதலாக கிறிஸ்து பிறப்பு குடில் உருவாக்கப்பட்டதை நினைவுகூரும் விதமாக, வத்திக்கான் வளாகத்தில் கிரேச்சோ மலைப்பகுதியை உருவக்கப்படுத்தும் வகையில் குடில் அமைக்கப்பட்டுள்ளது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

இயேசு பிறந்த பெத்லகேம் பகுதி வன்முறை மற்றும் போர்ச்சூழலால் நிரம்பியுள்ள சூழலில் நாம் அனைவரும் இடையர்களாக இயேசுவே நமது சகோதரர் என்று அறிவிக்க அழைக்கப்படுகின்றோம் என்றும் கூறினார் வத்திக்கான் நகர நிர்வாகத்தலைவர் கர்தினால் Fernando Vérgez Alzaga.

டிசம்பர் 9 சனிக்கிழமை மாலை தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கிறிஸ்து பிறப்பு குடில் மற்றும் மரம் அமைதி மற்றும் நம்பிக்கையின்  அடையாளங்களாகத் திறந்து வைக்கப்பட்டபோது இவ்வாறு கூறினார் கர்தினால் அல்சாகா. இந்நிகழ்வின்போது வத்திக்கான் நாட்டின் நிரர்வாகப் பொதுச் செயலர் அருள்சகோதரி Raffaella Petrini, கிறிஸ்துமஸ் மரம் மற்றும் குடிலை வழங்கிய இத்தாலியின் Rieti மற்றும் Macra பகுதி பிரதிநிதிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

கிரேச்சோ பகுதியில் வைக்கப்பட்ட முதல் குடில்

1221 ஆம் ஆண்டு சபையின் தலைமைப் பொறுப்பைத் துறந்த புனித பிரான்சிஸ் அசிசியார் 1223 ஆம் ஆண்டு இயேசு பிறந்த இடமான பெத்லகேம் போன்று இத்தாலியிலும் குடில் அமைத்து கிறிஸ்து பிறப்பைக் கொண்டாட வேண்டும் என்று எண்ணி, உரோமிலிருந்து அசிசிக்கு செல்லும் வழியில் இருந்த கிரேச்சோ என்ற மலைப்பகுதியில் ஒரு குடிலை உருவாக்கினார்.

வைக்கோல்களால் நிரப்பப்பட்டு, மாடு, கழுதை போன்ற விலங்கினங்கள் கொண்டு வரப்பட்டு, மாட்டுத்தொழுவம் போல் அப்பகுதியை உருவாக்க யோவான் வெலீட்டா என்னும் அப்பகுதியைச் சார்ந்தவரும், அசிசி சபையாருக்கு உதவிகள் செய்துவருகின்றவருமான மனிதர் ஒருவர் புனித அசிசியாரின் குடில் எண்ணத்திற்கு உதவினார்.

நள்ளிரவில் அப்பகுதி மக்கள் கையில் தீப்பந்தங்களோடு கிறிஸ்து பிறப்பு திருப்பலியில் பங்கேற்க தீவனத்தொட்டியில் கிடத்தியிருந்த இயேசுவைக் கொஞ்சி மகிழும் போது உண்மையான பாலன் இயேசுவைக் காணும் மகிழ்வினை அடைந்தார் புனித அசிசியார்.

800 ஆண்டுகளுக்கு முன்பு முதன் முதலாக கிறிஸ்து பிறப்பு குடில் உருவாக்கப்பட்டதை நினைவுகூரும் விதமாக, வத்திக்கான் வளாகத்தில் கிரேச்சோ மலைப்பகுதியை உருவகப்படுத்தும் வகையில் குடில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 December 2023, 09:12