தேடுதல்

காசாவில் இஸ்ரயேலின் தாக்குதல் காசாவில் இஸ்ரயேலின் தாக்குதல்  

காசாவில் நிகழும் மனிதாபிமானமற்ற சூழல் ஏற்றுக்கொள்ள முடியாதது!

காசாவில் 5,000 பாலஸ்தீனிய குழந்தைகளின் மரணம் குறித்து தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ள அதேவேளை, அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலையும் கண்டித்துள்ளார் பேராயர் Ettore Balestrero

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

புனித பூமியின் சூழலில், உரையாடலுக்கான வழி தற்போது மட்டுப்படுத்தப்பட்டதாகத் தோன்றலாம் என்றாலும், நிகழ்ந்து வரும் வன்முறைக்கு நீண்டகால முடிவுக்கான ஒரே நடைமுறை தீர்வு உரையாடல் வழியாக மட்டுமே அமைய முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார் பேராயர் Ettore Balestrero

நவம்பர் 21, இச்செவ்வாயன்று, ஜெனிவாவின் Palais des Nations-லில் நடந்த UNCTAD வர்த்தக மற்றும் மேம்பாட்டு வாரியத்தின் 74-வது நிர்வாக அமர்வில் இவ்வாறு கூறினார் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகம் மற்றும் சிறப்பு முகமைகளுக்கான நிரந்தர பிரதிநிதி பேராயர் Ettore Balestrero

பயங்கரவாதமும் தீவிரவாதமும் வெறுப்பு, வன்முறை மற்றும் பழிவாங்குதல் மற்றும் ஒருவருக்கொருவர்மீது  துயரத்தை ஏற்படுத்துகின்றன என்று கூறிய பேராயர் Balestrero அவர்கள், அனைத்து பிணையக் கைதிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்ற திருத்தந்தை அவர்களின் அழைப்பையும் எதிரொலித்தார்.

திருப்பீடம் தற்காப்பு உரிமையை மீண்டும் உறுதிப்படுத்தும் அதேவேளையில், விகிதாசாரக் கொள்கை எப்போதும் மதிக்கப்பட வேண்டும்" என்றும் குறிப்பிட்ட பேராயர் Balestrero அவர்கள், இந்தச் சூழலில், காசா பகுதியில் உள்ள பேரழிவுகரமான மனிதாபிமான சூழ்நிலையில் திருப்பீடத்தின் ஆழ்ந்த அக்கறையை மீண்டும் வலியுறுத்த விரும்புவதாகவும் கூறினார்.

புனித பூமியில் உரையாடல் பாதை தற்போது மட்டுப்படுத்தப்பட்டதாகத் தோன்றினாலும், அங்கே கிறிஸ்தவர்கள், யூதர்கள் மற்றும் முஸ்லிம்களைப் பாதிக்கும் வன்முறைக்கு நீண்டகால முடிவுக்கான ஒரே நடைமுறை தீர்வு உரையாடல் வழி ஒன்றுதான் என்றும் வலியுறுத்தினார் பேராயர் Balestrero.

இரு நாடுகளின் தீர்வுக்கான திருப்பீடத்தின் அர்ப்பணிப்பை வலியுறுத்திய பேராயர் Balestrero. அவர்கள், இந்த அமைதியை அடைவதற்கான சாத்தியமான விருப்பமாக  இருப்பது நம்பிக்கை ஒன்றுதான் என்றும்  உறுதிப்படுத்தினார்.

"போதும்! போதும், சகோதரர்களே! காசாவில், காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்படட்டும், பொதுமக்கள் பாதுகாக்கப்படட்டும், மேலும் மனிதாபிமான உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடைய அனுமதிக்கட்டும் என்றும், ஒவ்வொரு மனிதரும், கிறிஸ்தவர், யூதர், முஸ்லீம் என எந்த மக்கள் அல்லது மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர் புனிதமானவர், கடவுளின் பார்வையில் விலைமதிப்பற்றவர் மற்றும் அமைதியுடன் வாழ்வதற்கு உரிமை உடையவர்,  ஆகவே, நம்பிக்கையை இழக்காமல் இருப்போம், கடின இதயம் அகற்றப்பட்டு மனிதநேய உணர்வு கொண்ட இதயங்கள் மேலோங்குவதற்காகத் தொடர்ந்து அயராது இறைவேண்டல் செய்வோம், உழைப்போம் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வார்த்தைகளை எடுத்துக்காட்டி தன் உரையை நிறைவு செய்தார் பேராயர் Balestrero.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 November 2023, 11:46