தேடுதல்

வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக செபிக்கும் கென்யா நாட்டுப் பெண் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக செபிக்கும் கென்யா நாட்டுப் பெண்  (ANSA)

பெண்களுக்கு உளவியல் மற்றும் ஆன்மிக ஆலோசனை

அன்பு, பாசம், மற்றவர்களை மதித்தல், மனித மாண்பு, பெண்கல்வி, போன்றவைகள் பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க மிகவும் அவசியமானவைகள்

மெரினா ராஜ் - வத்திக்கான்

வன்முறை மற்றும் சுரண்டலுக்கு உள்ளான பெண்களுடன் தங்களது உடனிருப்பை, நெருக்கத்தை தலத்திருஅவை பல்வேறு விதங்களில் வெளிப்படுத்தலாம் என்றும், பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட முறைகேடுகளை எடுத்துரைத்து, உளவியல், ஆன்மிக ஆலோசனை மற்றும் ஆதரவு பெற உதவலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார் கர்தினால் கெவின் ஜோசப் ஃபாரெல்.

நவம்பர் 25 சனிக்கிழமை சிறப்பிக்கப்படும் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பன்னாட்டு நாளை முன்னிட்டு இவ்வாறு தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார் பொதுநிலையினர், குடும்பம், மற்றும், வாழ்வு திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் கெவின் ஜோசப் ஃபாரெல்.

குடும்பங்கள் மற்றும் கிறிஸ்தவ சமூகங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அனைத்து பெண்களுக்கான கல்வியில் அதன் விழிப்புணர்வில் இருந்து தீர்த்துவைக்கப்படுகின்றது என்று சுட்டிக்காட்டியுள்ள கர்தினால் ஃபாரெல் அவர்கள், பெண்களுக்கு உளவியல் மற்றும் ஆன்மிக ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் எடுத்துரைத்துள்ளார்.  

அன்பு, பாசம், மற்றவர்களை மதித்தல், மனித மாண்பு, பெண்கல்வி, போன்றவைகள் பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க மிகவும் அவசியமானவைகள் என்றும், இதற்கான உறுதியான ஆதாரங்கள் மற்றும் வேர்களை நற்செய்தியில் நம்மால் காண முடிகின்றது என்றும் எடுத்தியம்பியுள்ளார் கர்தினால் ஃபாரெல்

உலகெங்கிலும் உள்ள தலத்திருஅவை நிறுவனங்கள், குடும்பங்கள், இளையோர், புதுமணத் தம்பதிகள் மற்றும் குழுக்களுக்கு பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்கும் நோக்கில் கல்விப் பாதைகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ள கர்தினால் ஃபாரெல் அவர்கள், இது ஒரு மேய்ப்புப்பணி பொறுப்பிற்கான திருஅவையின் அழைப்பாக இருக்க வேண்டும் என்றும், அமைதிக்கான ஒரு கருவியாக திருஅவை செயல்படுகின்றது என்பதனை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 November 2023, 14:21