தேடுதல்

ஆயர் மாமன்ற பொது அறிக்கையாளர்,  கர்தினால் Jean-Claude Hollerich ஆயர் மாமன்ற பொது அறிக்கையாளர், கர்தினால் Jean-Claude Hollerich  

மறைப்பணிகளில் கூட்டுப்பொறுப்பு குறித்து ஆயர் மாமன்றம்

நாம் வாழும் வழிகளை, உண்மை நிலைகளை நாம் புரிந்துகொள்ளும் முறைகளை, வாழ்க்கை தொடர்பு முறைகளை மாற்றியமைக்கும் வல்லமையுடையது இணையதளம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

அக்டோபர் மாதம் 4ஆம் தேதி புனித பிரான்சிஸ் அசிசியாரின் திருவிழாவன்று வத்திக்கானில் துவங்கிய ஆயர் மாமன்றக் கூட்டத்தின் 8வது பொது அவைக் கூட்டம், அக்டோபர் 13ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று, மறைப்பணிகளில் கூட்டுப்பொறுப்பு குறித்து விவாதிக்கத் துவங்க உள்ளதாக முன்னுரை வழங்கினார் கர்தினால் Jean-Claude Hollerich.

“மறைப்பணிகளில் கூட்டுப்பொறுப்பு : நற்செய்திப் பணியில் நம் கொடைகளையும் கடமைப் பொறுப்புக்களையும் எவ்விதம் பகிர்வது?” என்ற தலைப்பில் ஆயர் மாமன்றம், வரும் நாட்களில் விவாதிக்க உள்ளதாக உரைத்த ஆயர் மாமன்ற பொது அறிக்கையாளர் கர்தினால் Hollerich அவர்கள், ஒருங்கிணைந்து நடைபோடும் திருஅவை என்பது, மறைப்பணிக்கென அனுப்பப்பட்ட திருஅவை என்பதை கோடிட்டுக் காட்டினார்.

கடந்த நாட்களில் ஆயர் மாமன்றக் கூட்டத்தில் டிஜிட்டல் கண்டம், அதாவது இலக்கமுறை கண்டம் என்பது குறித்து பேசிவந்துள்ளதையும் சுட்டிக்காட்டிய கர்தினால், இணையதளத்தை நாம் நற்செய்தி அறிவிப்புக்கான கருவியாகப் பார்க்கிறோம், ஆனால் அது அதைவிட மேலானது, ஏனெனில், நாம் வாழும் வழிகளை, உண்மை நிலைகளை நாம் புரிந்துகொள்ளும் முறைகளை, வாழ்க்கை தொடர்பு முறைகளை மாற்றியமைக்கும் வல்லமையுடைய இணையதளம், மறைப்பணிக்கான புதிய நிலப்பகுதி எனவும் எடுத்துரைத்தார்.

திருஅவையின் மறைப்பணி என்பது, ஒன்றிணைந்த சுற்றுச்சூழல், நீதிக்கும் அமைதிக்குமான போராட்டம், ஏழைகளுக்காக உழைத்தல், அனைவரிடமும் திறந்த மனதுடன் செயல்படுதல் போன்றவைகளுக்கான அர்ப்பணத்துடன் வெறும் வார்த்தைகளால் அல்ல, வாழ்க்கையால் காட்டப்படவேண்டும் என எடுத்துரைத்தார் ஆயர் மாமன்ற பொது அறிக்கையாளர் கர்தினால் Hollerich.

டிஜிட்டல் மறைப்பணிகளில் தங்கள் அனுபவங்களை இங்கு பகிர்ந்துகொண்ட அருள்சகோதரி Xiskya Lucia VALLADARES PAGUAGA மற்றும் பொதுநிலையினர் José Manuel DE URQUIDI GONZALEZ ஆகியோர், 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து, துவக்க மாதத்திலேயே 250 மறைப்பணியாளர்கள் இணையதளம் வழி 115 நாடுகளில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேரிடம் ஆலோசனை நடத்தியதாகவும், இணையதளம் வழி அவர்களின் குரலுக்குச் செவிமடுக்கும் வாய்ப்பிருப்பதையும் எடுத்துரைத்தனர்.

இதே பொதுஅவையில் உரையாற்றிய தென்சூடானின் Juba உயர் மறைமாவட்ட பேராயர், கர்தினால் Stephen Ameyu Martin MULLA அவர்கள், ஆதிகால கிறிஸ்தவ சமூகங்கள் போல் ஆயர்கள் விசுவாசிகளின் நடுவில் உயிர்துடிப்புடைய நம்பிக்கையை ஊட்டுபவர்களாக, அவர்களின் வாழ்வில் பங்கேற்க வேண்டும் என விண்ணப்பித்தார்.

நற்செய்திப் பணியில் எவ்வாறு கொடைகளையும் கடமைப்பொறுப்புகளையும் பகிர்ந்துகொள்வது என்பது குறித்து அர்ஜென்டினாவின் கத்தோலிக்க பல்கலைக்கழக இறையியல் துறைத்தலைவர் முனைவர், அருள்பணி Carlos María Galliயும், பெண்களும் மறைப்பணியும் என்ற தலைப்பில், விவிலியத்திலிருந்தும் ஆதிகாலத் திருஅவையிலிருந்தும் மேற்கோள்களைக் காட்டி அருள்சகோதரி Maria Grazia Angelini அவர்களும் அக்டோபர் 13, வெள்ளிக்கிழமையின் ஆயர் மாமன்ற பொதுஅவைக் கூட்டத்தில் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 October 2023, 16:10