அறுவடைப்பணிக்கு நம்மைத் தேர்ந்தெடுத்த கிறிஸ்துவின் இரக்கம்
மெரினா ராஜ் - வத்திக்கான்
துன்புறும் உலகில் வாழும் மக்களின் நலனுக்காகவும், நமது பொதுவான இல்லமாகிய இப்பூமியின் அமைதிக்காகவும், ஒரு சிறந்த உலகை உருவாக்கவும், கிறிஸ்துவின் இரக்கம் நம்மை அழைக்கின்றது என்றும், இத்தகைய இரக்கம் அறுவடைக்குத்தகுதியான ஆட்களாக நம்மை மாற்ற ஒருவர் ஒருவராகத் தேர்ந்தெடுத்துள்ளது என்றும் கூறினார் கர்தினால் Béchara Boutros Raï.
அக்டோபர் 9 திங்கள் கிழமை காலையில் நடைபெற்ற 16ஆவது உலக ஆயர்கள் மாமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்புத்திருப்பலியில் வழங்கிய மறையுரையின்போது இவ்வாறு கூறினார் லெபனானின் மாரனைட் கத்தோலிக்க வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை கர்தினால் Béchara Boutros Raï.
இரத்தம் சிந்த வைக்கும் உலகில் அமைதியை உருவாக்குதல், மாறிவரும் சூழலிலியல் மாற்றத்திலிருந்து நாம் வாழும் உலகைக் காத்தல், துன்பம், சுரண்டல் மற்றும் ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான பொருளாதாரப் போராட்டம், வன்முறை, பாலியல் முறைகேடு, பொருளாதாரம், அதிகார ஆட்சி முறை போன்றவற்றால் ஏற்படும் காயங்களைக் குணப்படுத்துதல் போன்ற அறுவடைப்பணிகளில் நாம் ஈடுபட இறைவன் அழைப்புவிடுக்கின்றார் என்றும் கூறினார் கர்தினால் ராய்.
இத்தகைய அறுவடைப்பணிகளில் ஈடுபடுதவதற்கான ஆற்றலினைத் திருமுழுக்கு அருளடையாளத்திலிருந்து நாம் பெற்றுக்கொண்டோம் என்று கூறிய கர்தினால் ராய் அவர்கள், இது நம்மை கடவுளின் பிள்ளைகளாக மாற்றி தலத்திருஅவைகள் மற்றும் பிற கிறிஸ்தவசபைகளோடு உள்ள சகோதர உறவை ஆழமாக்குகின்றது என்றும் எடுத்துரைத்தார்.
அறுவடையோ மிகுதி
பிறசமய நண்பர்களுடனான கலாச்சார சந்திப்பு மற்றும் உரையாடல், ஏழைகள், தாழ்த்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் பிறரன்புப் பணி, கைம்பெண்கள், மறுமணம் செய்தவர்கள், பிரிந்து வாழ்பவர்கள், சிறியோர், இளையோர், முதியோர் ஆகியோர்க்கான பணி என நமது அறுவடைப்பணி மிகுதியானது என்று சுட்டிக்காட்டிய கர்தினால் ராய் அவர்கள், இப்பணியானது கிறிஸ்துவால் அனுப்பப்பட்டு, தூய ஆவியால் வழிநடத்தப்படும் பணியாளர்களாகிய நமது பணி என்றும் கூறினார்.
ஒருங்கிணைந்த பயணத்தில் கிறிஸ்து தன்னை முன்னிலைப்படுத்தி செயல்படுகிறார், வரலாற்றையும் அன்றாட நிகழ்வுகளையும் மாற்றுகிறார், அவரது அரசை நோக்கி எவ்வாறு ஒன்றிணைந்து செல்வது என்பதில் ஒருமித்த கருத்தைக் கண்டறிய திருஅவைக்கு வழிகாட்டும் தூயஆவியை அளித்து, மனிதகுலம் முன்னேற உதவுகிறார் என்ற வரிகளைச் சுட்டிக்காட்டிய கர்தினால் ராய் அவர்கள், கடவுள் பணிக்காக அர்ப்பணிக்கப்பட்ட நாம் அனைவரும் இந்த ஒருங்கிணைந்த பயணத்திருஅவை வழியில் பயிற்சி பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ஒற்றுமை, பணி மற்றும் பங்கேற்பு என்ற கருத்துடன் நடைபெறும் இந்த உலக ஆயர்கள் மாமன்றத்தில் ஒருங்கிணைந்த பயணம் என்பது நமது பயணத்தின் இதயமாகவும் திருஅவை புதுப்பித்தல் பயிற்சியில் இருக்க வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்