தேடுதல்

உலக ஆயர் மாமன்றம் உலக ஆயர் மாமன்றம்  (Vatican Media)

உலக ஆயர் பேரவையின் இறுதி அறிக்கை முன்வரைவு குறித்த வாக்கெடுப்பு

உலக ஆயர் மாமன்ற இறுதி ஏட்டின் சுருக்கத்தினை முதலில் தனித்தனியாகவும், பின்னர் குழுவாகவும் அங்கத்தினர்கள் வாசித்தபின் வாக்கெடுப்பு இடம்பெறும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

அக்டோபர் மாதம் 4ஆம் தேதி முதல் இடம்பெற்றுவரும் உலக ஆயர் பேரவை மாநாட்டின் இறுதி அறிக்கையின் முன்வரைவு குறித்து ஆயர் மாமன்றத்தின் விவாத குழுக்களிடமிருந்து 1125 கருத்துக்களும், தனிப்பட்டவிதத்தில் 126 கருத்துக்களும் சேகரிக்கப்பட்டுள்ளதாக அக்டோபர் 27 வெள்ளிக்கிழமை பிற்பகலில் நடந்த கூட்டத்தில் அறிவித்தார் முனைவர் பவுலோ ரூபினி.

இக்கருத்துக்கள் அனைத்தும் கணக்கில் எடுக்கப்பட்டு, இறுதி அறிக்கையின் முன்வரைவில் மாற்றம் கொணரப்பட்டு, சனிக்கிழமையன்று காலை இத்தாலியம் மற்றும் ஆங்கிலத்தில் மாமன்றத்தில் முன்வைக்கப்படும் என்ற  திருப்பீட சமூகத்தொடர்புத் துறையின் தலைவர் முனைவர் ரூபினி அவர்கள், இந்த ஏட்டின் சுருக்கத்தினை முதலில் தனித்தனியாகவும், பின்னர் குழுவாகவும் அங்கத்தினர்கள் வாசித்தபின் வாக்கெடுப்பு இடம்பெறும் என தெரிவித்தார்.

இறுதி ஏட்டின் சுருக்கமும், வாக்கெடுப்பின் விவரமும் மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் எனவும் அறிவித்தார் முனைவர் ரூபினி.

ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் மடிகணனி வழியாக, இந்த இறுதி ஏட்டுச் சுருக்கத்தின் ஒவ்வொரு பகுதி வாரியாக வாக்கெடுப்பு இடம்பெறும் என மேலும் கூறிய முனைவர் ரூபினி அவர்கள், மூன்றில் இரண்டு பகுதி வாக்குப் பெற்றவைகள் யாவும் ஒப்புதல் பெற்றவைகளாக கருதப்படும் எனவும் கூறினார்.

இந்த ஆயர் மாமன்றத்தின் இறுதி நிகழ்வாக ஆகஸ்ட் 29, ஞாயிற்றுக்கிழமையன்று, காலை இத்தாலிய நேரம் 10 மணிக்கு வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் திருப்பலி நிறைவேற்றப்படுவதுடன் இந்த ஆயர் மாமன்றக் கூட்டம் நிறைவுக்கு வரும். இதன் தொடர்ச்சியாக அதன் இறுதிக்கூட்டம் 2024ஆம் ஆண்டு அக்டோபரில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 October 2023, 14:58