தேடுதல்

திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்  

நீதியின் அடிப்படையில் அமைதி நிலவ...

எருசலேமில் சமாதானம் நிலைத்திருக்கும்படி வேண்டிக்கொள்ளுங்கள்; “உன்னை விரும்புவோர் வளமுடன் வாழ்வார்களாக! உன் கோட்டைகளுக்குள் அமைதி நிலவுவதாக! திருப்பாடல் 122

மெரினா ராஜ் – வத்திக்கான்

நீதியின் அடிப்படையில்தான் அமைதி நிலவ முடியும், நீதி இல்லாமல் மனிதர்களிடையே அமைதி இருக்க முடியாது என்றும், கிறிஸ்தவ பிரசன்னம் இல்லாமல் பாலஸ்தீனத்தையோ அல்லது இஸ்ரேலையோ யாராலும் நினைத்துப் பார்க்க முடியாது என்றும் கூறினார் கர்தினால் பியத்ரோ பரோலின்.

அக்டோபர் 13 வெள்ளிக்கிழமை இஸ்ரயேல் மற்றும் பாலஸ்தீனம் இடையில்னா வன்முறை மற்றும் தாக்குதல் குறித்து திருப்பீடத் தகவல்தொடர்பு அவையின் செய்திப் பிரிவு இயக்குனர், முனைவர் அந்த்ரேயா தொர்னியெல்லி அவர்களுக்கு வழங்கிய நேர்காணலின் போது இவ்வாறு கூறினார் திருப்பீடச் செயலர் கர்தினால் பரோலின்.

பாலஸ்தீனியர்கள் மற்றும் இஸ்ரேலியர்கள் இருவரும் அருகருகே, அமைதி மற்றும் பாதுகாப்புடன் வாழவும், அவர்களில் பெரும்பாலோரின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் இரு நாட்டுத் தீர்வே புனித பூமியில் சாத்தியமான மிகப் பெரிய நீதி என்று தான் கருதுவதாகவும் எடுத்துரைத்தார் கர்தினால் பரோலின்.

ஹமாஸால் பிடிக்கப்பட்டவர்கள் உட்பட, பணயக்கைதிகள் உடனடியாக திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்றும், மனிதாபிமானச் சட்டம் முழுமையாக மதிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்திய கர்தினால் பரோலின் அவர்கள், மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தை, இஸ்ரேலிய குடியேற்றங்கள் மற்றும் பாதுகாப்பு எருசலேம் நகரத்தின் பிரச்சினை போன்றவற்றைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் இடையிலான நேரடி உரையாடலில் ஒரு தீர்வைக் காண முடியும் என்று கூறிய கர்தினால் பரோலின் அவர்கள், பன்னாட்டு சமூகத்தால் இந்த செயல் ஊக்குவிக்கப்பட்டு ஆதரிக்கப்பட வேண்டும் என்ரும் வலியுறுத்தினார்.

பாதிக்கப்பட்ட குடும்பங்கள், பெரும்பான்மையாகப் பாதிக்கப்பட்ட யூதர்கள், மற்றும் காயமடைந்தவர்களுக்காக செபிப்பதாக எடுத்துரைத்த கர்தினால் பரோலின் அவர்கள், பகுத்தறிவை மீட்டெடுத்து வெறுப்பைக்கைவிட்டு, வன்முறையை நிராகரிப்பது அவசியம் என்றும் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வது உரிமை என்றாலும் தற்காப்பின் அளவு மதிக்கத்தக்க வகையில் இருக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

நீதியின் அடிப்படையில் அமைதி கட்டமைக்கப்படுகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் மீண்டும் வலியுறுத்திய கர்தினால் பரோலின் அவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு செபம், ஆன்மிக நெருக்கம் அடிப்படை உதவிப்பொருள்கள், அமைதிக்கான பேச்சுவார்த்தை ஆகியவற்றிற்கு உதவ திருப்பீடம் தயாராக இருக்கின்றது என்றும் கூறினார்.

“எருசலேமில் சமாதானம் நிலைத்திருக்கும்படி வேண்டிக்கொள்ளுங்கள்; “உன்னை விரும்புவோர் வளமுடன் வாழ்வார்களாக! உன் கோட்டைகளுக்குள் அமைதி நிலவுவதாக!

உம் மாளிகைகளில் நல்வாழ்வு இருப்பதாக! உன்னுள் சமாதானம் நிலவுவதாக!” என்று

நான் என் சகோதரர் சார்பிலும் என் நண்பர் சார்பிலும் உன்னை வாழ்த்துகின்றேன்“  என்ற திருப்பாடல் 122 வரிகளுடன் தனது நேர்காணலை நிறைவு செய்தார் திருப்பீடச் செயலர் கர்தினால் பரோலின்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 October 2023, 11:45