தேடுதல்

கர்தினால் பியெத்ரோ பரோலின். கர்தினால் பியெத்ரோ பரோலின். 

குழந்தைகளின் வருங்காலத்தை மனதில்கொண்டு அமைதிக்கான அழைப்பு

மத்தியக்கிழக்கின் பதட்டத்தில் உக்ரைன் நாட்டை திருப்பீடம் மறந்துவிடவில்லை, அதற்கான மனிதாபிமானப் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

இரு இனங்கள், இரு நாடுகள் என்பதும், இருதரப்பினர் இடையேயான நேரடிப் பேச்சுவார்த்தைகள் வழியாகவே, வருங்கால அமைதியை உறுதிச் செய்ய முடியும் என்பதும் எப்போதும் திருப்பீடத்தின் நிலைப்பாடாக இருந்து வந்துள்ளது என எடுத்துரைத்தார் திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின்.

உரோம் நகர நிர்வாக அவையில் இடம்பெற்ற ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய கர்தினால் பரோலின் அவர்கள், மத்தியக்கிழக்குப் பகுதியின் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதத்தில் அப்பகுதியின் மோதல்கள் முடிவுக்கு வரவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

பிணையக் கைதிகளாக எடுத்துச் செல்லப்பட்டிருப்போரின் குடும்பங்களுக்கும் திருத்தந்தைக்கும் இடையே சந்திப்புக்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன என்பதையும், உக்ரைன் நாட்டிற்கான திருப்பீடத்தின் மனிதாபிமானப் பணிகள் தொடர்ந்து இடம்பெறும் என்ற உறுதியையும் எடுத்துரைத்தார் திருப்பீடச் செயலர், கர்தினால் பரோலின்.

ஹமாஸ் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளையும், காசா பகுதி மீதான குண்டுவீச்சுகளால் துயர்களை அனுபவிக்கும் குழந்தைகளையும் குறித்து அனைவரும் சிந்திக்கவேண்டும் என அழைப்புவிடுத்த கர்தினால், அக்குழந்தைகளின் சார்பாக, அவர்களின் அப்பாவியான நிலைகளுக்காகவும், அவர்களின் வருங்காலத்திற்காகவும் இந்த அழைப்பை விடுப்பதாகவும் தெரிவித்தார்.

மத்தியக்கிழக்குப் பகுதியின் குழந்தைகளுக்காக தன்னால் இயன்ற அனைத்தையும் திருப்பீடம் ஆற்றத் தயாராக இருப்பதாகவும், மத்தியக்கிழக்குப் பகுதியின் அமைதி தீர்வுக்கு தன் பங்களிப்பை வழங்க திருப்பீடம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார் கர்தினால் பரோலின்.

அமைதிக்காக தங்களால் ஆன அனைத்தையும் வழங்க திருத்தந்தையும் திருஅவையும் மிகவும் ஆர்வத்துடன் இருப்பதாகவும், பிணையக் கைதிகள் குறித்த பிரச்சனைக்குத் தீர்வுகாணப்படும்போது, மோதல்களின் தீவிரம் குறையும் என எதிர்பார்ப்பதாகவும் உரைத்தார் திருப்பீடச் செயலர்.

மத்தியக்கிழக்குப் பகுதியின் பதட்ட நிலைகள் குறித்து ஏற்கனவே திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தொலைபேசி வழியாக, அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் ஜோ பைடன் அவர்களுடன் உரையாடியதையும் குறிப்பிட்டார் கர்தினால் பரோலின்.

பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தபோது, அமைதிக்கான திருப்பீடத்தின் முயற்சிகளை விரிவாக் இவ்வாறு எடுத்துரைத்த கர்தினால் பரோலின் அவர்கள், இந்த பதட்டத்தில் உக்ரைன் நாட்டை திருப்பீடம் மறந்துவிடவில்லை எனவும், அதற்கான மனிதாபிமானப் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் மேலும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 October 2023, 14:40