தேடுதல்

ஆஸ்திரேலியாவின் பழங்குடியின மக்கள் ஆஸ்திரேலியாவின் பழங்குடியின மக்கள்  (AFP or licensors)

பூர்வீகக் குடிகளின் கலாச்சாரம், ஆன்மீகம் பாதுகாக்கப்பட வேண்டியவை

இயற்கையோடு பூர்வீகக் குடியின மக்கள் கொண்டிருக்கும் இணக்கமான உறவும், காலநிலை மாற்றத்தின் விளைவுகளை குறைப்பதில் அவர்களின் பங்களிப்பும் பாராட்டப்பட வேண்டியவை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

பூர்வீகக் குடிமக்களின் உரிமைகளும் மாண்பும் பாதுகாக்கப்படுவதுடன், அவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு வழங்கிவரும் பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்டு பாராட்டப்பட வேண்டும் என ஐ.நா. பொதுஅவைக் கூட்டத்தில் அழைப்பு விடுத்துள்ளார் திருப்பீட அதிகாரி பேராயர் Gabriele Caccia.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் நியூ யார்க் நகரில் ஐ.நா. பொதுஅவைக் கூட்டத்தில் பூர்வீகக் குடிமக்களின் உரிமைகள் குறித்து உரையாற்றிய திருப்பீட நிரந்தரப் பார்வையாளர் பேராயர் காச்சா அவர்கள், பூர்வீகக் குடிகளின் கலாச்சாரம், மொழி, பாரம்பரியங்கள், ஆன்மீகம் போன்றவை போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

இயற்கையோடு பூர்வீகக் குடியின மக்கள் கொண்டிருக்கும் இணக்கமான உறவை வெகுவாகப் பாராட்டிய திருப்பீட அதிகாரி, காலநிலை மாற்றத்தின் விளைவுகளை குறைப்பதில் அவர்களின் பங்களிப்பையும் சுட்டிக்காட்டிப் பாராட்டியுள்ளார்.

பூர்வீகக் குடிமக்களுக்குரிய காட்டுப் பகுதிகளை, அவர்களுடன் கலந்தாலோசிக்காமலேயே பாதுகாக்கப்பட்ட பகுதிகள் என தனியாக ஒதுக்கி வைப்பது என்பது, மனித உரிமை மீறல்கள், மக்கள் கடத்தப்படல், கட்டாயமாக வேலைக்கு அமர்த்தப்படல், பாலினமுறையில் சுரண்டல் போன்றவைகளுக்கு இட்டுச் செல்லும் ஆபத்து உள்ளதையும் எடுத்தியம்பினார் பேராயர்.

இடங்கள், பொருள்கள் குறித்த நல்ல அனுபவ அறிவைக் கொண்டுள்ள பூர்வீக இனமக்களின் அடிப்படை உரிமைகளை மதிப்பதுடன், அவர்களுடன் கருத்துப் பரிமாற்றங்களைத் துவக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார் திருப்பீட அதிகாரி, பேராயர் காச்சா.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 October 2023, 15:17