மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தடுக்கப்பட விண்ணப்பம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் என்ற தலைப்பில் ஐ.நா. அவையின் ஒரு கூட்டத்திலும், ஏழ்மை அகற்றலும் உணவு பாதுகாப்பும் என்ற மையப்பொருளில் இன்னொரு கூட்டத்திலும் திருப்பீடத்தின் கருத்துக்களை அக்டோபர் 12 வியாழக்கிழமையன்று பகிர்ந்துகொண்டார் பேராயர் Gabriele Caccia.
மனிதகுலத்திற்கு எதிரான எண்ணற்றக் குற்றங்களால் மனிதமாண்பு மீறப்படுவதும், சொல்லமுடியாத அளவு துன்பங்கள் தொடர்வதும் இடம்பெற்றுவருகிறது என்ற கவலையை வெளியிட்ட ஐ.நா.விற்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர், பேராயர் Caccia அவர்கள், உடனடியான, அதேவேளை பலன்தரும் நடவடிக்கைகள் இதற்கு எதிராகத் தேவைப்படுகின்றன எனக் கூறினார்.
மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டங்கள் இருக்கின்றபோதிலும் பெரும்குற்றங்கள், குறிப்பாக கற்பழிப்புகள், பாலியல் அடிமைமுறை, பரத்தமை போன்றவை இன்னும் தொடர அனுமதிக்கப்படுகின்றன என்ற கவலையையும் வெளியிட்ட பேராயர் Caccia அவர்கள், தேசிய அளவிலும் அனைத்துலக அளவிலும் போதிய பாதுகாப்புச் சட்டங்கள் தேவைப்படுகின்றன என்பதை வலியுறுத்தினார்.
ஐ,நா.வின் பிறிதொரு கூட்டத்தில், ஏழ்மை ஒழித்தலும் வளர்ச்சி விவகாரங்களும் என்ற தலைப்பிலும், வேளாண் வளர்ச்சி, உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து என்ற தலைப்பிலும் உரையாற்றிய திருப்பீடப் பிரதிநிதி, பேராயர் காச்சா அவர்கள், கல்வி கற்கவும், பதுகாப்பு, ஊட்டச் சத்து, போதிய உணவு, குடிநீர், சுகாதாரம், மின்சக்தி போன்றவைகளைப் பெறுவதற்கும் வாய்ப்பற்ற நிலைகளில் மக்கள் வாழும்போது ஏழ்மையை அகற்றுவது இயலாததாகின்றது என உரைத்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்