தேடுதல்

மறைபரப்பு ஞாயிறு மறைபரப்பு ஞாயிறு  

2021ன் இறுதியில் உலக மக்கள் தொகையில் 17.67% கத்தோலிக்கர்

திருஅவையின் அங்கத்தினர் எண்ணிக்கை, அதன் அமைப்புமுறை, நல ஆதரவு மற்றும் கல்விப் பணிகள் குறித்த புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது, பிதெஸ் செய்தி நிறுவனம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

அக்டோபர் மாதம் 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று, திருஅவையில் 97வது உலக மறைபரப்பு ஞாயிறு சிறப்பிக்கப்படுவதையொட்டி உலக திருஅவை குறித்த சில புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது, நற்செய்தி அறிவிப்புக்கான திருப்பீடத் துறையின் பிதெஸ் செய்தி நிறுவனம்.  

2021ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரையுள்ள புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ள பிதெஸ் செய்தி நிறுவனம், திருஅவையின் அங்கத்தினர் எண்ணிக்கை, அதன் அமைப்புமுறை, நல ஆதரவு மற்றும் கல்விப் பணிகள் குறித்த புள்ளிவிவரங்களைத் தந்துள்ளது.

2021ஆம் ஆண்டு இறுதியில் உலகில் 778 கோடியே 57 இலட்சத்து 69 ஆயிரம் மக்கள் இருந்ததாகவும், அது அதற்கு முந்தைய ஆண்டைவிட 11 கோடியே 86 இலட்சத்து 33ஆயிரம் அதிகம் எனவும் கூறும் இச்செய்தி நிறுவனம், கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை 2020ஆம் ஆண்டின் எண்ணிக்கையிலிருந்து 1 கோடியே 62 இலட்சத்து 40 ஆயிரம் அதிகரித்து 2021ஆம் ஆண்டின் இறுதியில் 137 கோடியே 58 இலட்சத்து 52 ஆயிரமாக இருந்தது என தெரிவிக்கிறது.

ஐரோப்பாவில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை இக்காலக்கட்டத்தில் 2 இலட்சத்து 44 ஆயிரம் குறைந்துள்ளதாகவும், கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள கண்டங்களில் ஆப்ரிக்கா முதலிடத்திலும், இரண்டாவது இடத்தில் அமெரிக்காவும், மூன்றாவது இடத்திலேயே ஆசியாவும் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை 2020ஆம் ஆண்டைவிட 0.06 விழுக்காடு 2021ல் குறைந்து, உலக மக்கள் தொகையில் 17.67 விழுக்காடு இருந்ததாக உரைக்கும் பிதெஸ் செய்தி நிறுவனம், உலகில் ஆயர்களின் எண்ணிக்கை இதே காலக்கட்டத்தில் 23 குறைந்து 5340 ஆக இருந்ததாகவும், உலகில் அருள்பணியாளர்களின் எண்ணிக்கையும் 2347 குறைந்து 4 இலட்சத்து 7ஆயிரத்து 872 ஆக இருந்ததாகவும், இந்த எண்ணிக்கைக் குறைவில் முதலிடத்தில் ஐரோப்பாவும் இரண்டாம் இடத்தில் அமெரிக்கக் கண்டமும் இருப்பதாகவும் தெரிவிக்கிறது.

மேலும், துறவு சபையின் அருள்பணியாளர்கள், நிரந்தரத் திருத்தொண்டர்கள், பெண் துறவறத்தார், குருத்துவப் பயிற்சி பெறும் மாணவர்கள் ஆகியோர் குறித்த விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

உலகில் கத்தோலிக்கத் திருஅவை நடத்தும் கல்வி நிலையங்களின் எண்ணிக்கை, அதில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை, கத்தோலிக்கத் திருஅவையால் நடத்தப்படும் மருத்துவமனைகள், பிறரன்பு மையங்கள், பராமரிப்பு இல்லங்கள், பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கான இல்லங்கள் என திருஅவையின் உலகளாவிய பல்வேறு சேவைகள் குறித்த விவரங்களும் பிதெஸ் செய்தி நிறுவனத்தால் 97வது உலக மறைபரப்பு ஞாயிறையொட்டி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 October 2023, 16:29