தேடுதல்

புலம்பெயரும் கட்டாயத்திற்கு உள்ளாகும் மக்கள் புலம்பெயரும் கட்டாயத்திற்கு உள்ளாகும் மக்கள்  (AFP or licensors)

அகதிகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு, ஒரு சலுகையல்ல

புகலிடம் தேடுவோரின் எண்ணிக்கை 10 கோடியே 80 இலட்சத்தைத் தாண்டியுள்ளது, மனித குலத்தின் துயர்கள் தொடர்வதையும், அமைதியின்மையையும் காட்டுவதாக உள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

உலகில் புலம் பெயர வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு இறுதியில் 10 கோடியே 80 இலட்சத்தைத் தாண்டியுள்ளது, மனித குலத்தின் துயர்கள் தொடர்வதையும் அமைதியின்மையையும் எடுத்துக்காட்டுவதாக உள்ளது என உரைத்தார் திருப்பீடச் செயலகத்தின் அதிகாரி, பேரருள்திரு Daniel Pacho.

அடைக்கலம் தேடுவோருக்கான ஐ.நா. அவைக் கூட்டத்தின் 74வது உயர்மட்ட அவையில் திங்கள்கிழமையன்று திருப்பீடத்தின் சார்பில் உரையாற்றிய பேரருள்திரு Pacho அவர்கள்,  மோதல்கள், வன்முறை, சித்ரவதைகள், மதநம்பிக்கைகளின் அடிப்படையில் பாகுபாட்டுடன் நடத்தப்படல், காலநிலை மாற்றங்களின் விளைவுகள் என பல காரணங்களால் மக்கள் அகதிகளாக  வெளியேறுவது தொடர்ந்து வருகிறது எனக் கவலையை வெளியிட்டார்.  

அகதிகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு என்பது, ஒரு சலுகையாக நோக்கப்படாமல், அது கடமையாகவும் உரிமையாகவும் நோக்கப்படவேண்டும் என்ற அழைப்பையும் விடுத்தார் பேரருள்திரு Pacho.

எந்த ஓர் அகதியும் ஆபத்து நிறைந்த அவரின் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படக்கூடாது, அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் தங்கும் அனுமதி வழங்கல், சமூக நிதியுதவி அளித்தல், குடும்ப உறுப்பினர்களை அழைக்க அனுமதி போன்றவைகளையும் அகதிகளுக்கன ஐ.நா. அவைக்கூட்டத்தில் வலியுறுத்தினார் திருப்பீட அதிகாரி.

இன்றும் நாம், அடைக்கலம் தேடும் மக்களை தரையிலும் கடலிலும், தொடர்ந்து இழந்துவருவது கவலை தருவதாக உள்ளது என்ற பேரருள்திரு Pacho அவர்கள், இத்தகைய நிலைகள் தொடராமல் இருக்க போதிய நடவடிக்கைகள் இடம்பெறவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 October 2023, 15:21