தேடுதல்

அருள்பணியாளர் Pino Puglisi நினைவிடம் அருள்பணியாளர் Pino Puglisi நினைவிடம்  

தீமைக்கு எதிரான போராட்டத்தில் யாரும் தனியாக இருக்கக்கூடாது

புனிதத்துவம் நம்மைச் சுற்றி இருக்கும் நண்பர்களையும், உடன் வாழ்பவர்களையும் நெருக்கமாக உணரவைக்கின்றது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

அருள்பணியாளர் Puglisi ஒரு நல்ல கிறிஸ்தவர், கடவுளின் வார்த்தையை அனைவருக்கும் எடுத்துரைப்பதில், பகிர்வதில் ஒருபோதும் சோர்வடையாதவர் என்றும், தீமைக்கு எதிரான போராட்டத்தில் யாரும் தனியாக இருக்கக்கூடாது என்ற மனநிலையுடன் செபிக்கும் மனிதராக, சிறார் விடுதலைக்காக உழைத்தவர் என்றும் கூறியுள்ளார் கர்தினால் மத்தேயோ சுப்பி.

செப்டம்பர் 15 வெள்ளிக்கிழமை உரோம் உள்ளூர் நேரம் மாலை 6 மணிக்கு வட இத்தாலியின் பலேர்மோவில் நடைபெற்ற அருள்பணியாளர் Pino Puglisi அவர்களின் முப்பதாமாண்டு நினைவு நாள் திருப்பலியில் பங்கேற்று, சிறப்பித்த போது இவ்வாறு கூறியுள்ளார் இத்தாலிய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் மத்தேயோ சுப்பி.

பலேர்மோவின் பெருநகர உயர் மறைமாவட்டப் பேராயர் Corrado LOREFICE அவர்களுடன் இணைந்து சிறப்பித்த இக்கூட்டுத்திருப்பலியில் ஏராளமான மக்கள் கல்ந்துகொண்டனர். மாபியா குழுக்களால் கொலைசெய்யப்பட்டு மறைசாட்சியாக இறந்த அருள்பணியாளர் Pino Puglisi அவர்களின் நினைவிடத்தின் முன் கூடி செபித்தனர்.  

புனிதத்துவம்  நம்மைச் சுற்றி இருக்கும் நண்பர்களையும் உடன் வாழ்பவர்களையும் நெருக்கமாக உணரவைக்கின்றது என்றும், இத்தகைய புனிதத்துவத்துடன் வாழ்ந்தவரே அருள்பணியாளர் Pino Puglisi என்றும் கூறியுள்ள கர்தினால் சுப்பி அவர்கள், கடவுள் பணி மற்றும் பிறர்பணியில் ஈடுபடுத்திக் கொள்ளவும், அழகான மற்றும் துன்பங்கள் நிறைந்த இந்த நகரத்தில் பணியாற்றவும் தன்னை அர்ப்பணித்தவர் என்றும் கூறியுள்ளார்.

புனிதத்துவம் என்பது நேரத்தையும் தூரத்தையும் கடந்து, நம்மை ஒன்றிணைக்கும் என்றும், வாழ்க்கையையும் அன்பையும் உருவாக்கும் உணர்ச்சிபூர்வமான பிணைப்பு என்றும் எடுத்துரைத்துள்ள கர்தினால் சுப்பி அவர்கள், மறுக்கமுடியாத நற்செய்தி ஆர்வத்தால் உந்தப்பட்டு புன்னகையுடன் தன் பணியினைத் தொடர்ந்தவர் அருள்பணியாளர் Pino Puglisi என்றும் எடுத்துரைத்துள்ளார்.

தலத்திருஅவை என்பது அதில் வாழும் மக்களுக்கு இடையேயும், விண்ணுலகம் மற்றும் மண்ணுலகத்திற்கு இடையேயான ஒற்றுமை என்றும் வலியுறுத்தியுள்ள கர்தினால் சுப்பி அவர்கள், புன்னகையுடன் செய்யப்படும் செயல்கள், பிறரை வரவேற்கவும், ஆடம்பரம் ஆணவம் போன்ற செயல்களிலிருந்து மீண்டு வரவும் உதவுகின்றது என்றும் கூறியுள்ளார்.   

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 September 2023, 11:40