மறைசாட்சிய இரத்தத்தால் திருமுழுக்குப் பெற்ற குழந்தை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
வரும் ஞாயிறன்று, அதாவது செப்டம்பர் 10ஆம் தேதியன்று, போலந்து நாட்டில் அருளாளர்களாக அறிவிக்கப்பட உள்ள மறைசாட்சிய உல்மா குடும்பத்தினர் குறித்த சில தெளிவான விளக்கங்களை வழங்கியுள்ளது திருப்பீடம்.
செப்டம்பர் 5, செவ்வாய்க்கிழமையன்று, புனிதர் பட்ட படிநிலைகளுக்கான திருப்பீடத்துறை வெளியிட்டுள்ள குறிப்பின்படி, போலந்தில் கொல்லப்பட்ட குடும்பத்தில் தாய் விட்டோரியா உல்மா அவர்கள் தன் ஏழாவது குழந்தையை வயிற்றில் தாங்கி, நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தபோது கொல்லப்பட்டார் என்பதும், அவர் தன் கிறிஸ்தவப் பிறரன்பு நடவடிக்கைக்காக கொல்லப்பட்ட வேளையில் அந்த குழந்தை தாயின் வயிற்றிலிருந்து வெளிவந்தது எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மன் துருப்புக்களால் மறைசாட்சிகளாக கொல்லப்பட்ட உல்மா குடும்பத்தின் தாயும் தந்தையும், அவர்களின் ஆறு குழந்தைகளும் கொல்லப்பட்ட வேளையில் தாய் விட்டோரியா தன் 7வது குழந்தையை இவ்வுலகிற்கு கொணர்ந்த வேளையில் அதுவும் உயிரிழந்தது எனக்கூறும் திருப்பீடத்துறையின் அறிக்கை, அந்தக் குழந்தை பிறக்கும்போதே மறைசாட்சிய இரத்தத்தால் திருமுழுக்குப் பெற்றுள்ளது எனவும் தெரிவிக்கிறது.
வயிற்றிலிருந்த குழந்தையும் அருளாளராக அறிவிக்கப்பட உள்ளதாகவும், அது திருமுழுக்குப் பெறாத குழந்தை என்பது குறித்தும் சில செய்தி ஊடகங்கள் கேள்வியெழுப்பியதைத் தொடர்ந்து, அக்குழந்தை தாயின் படுகொலையின்போது பிறந்தது எனவும், மறைசாட்சிய இரத்தத்தால் திருமுழுக்கைப் பெற்றுள்ளது எனவும் விளக்கமளித்துள்ளது புனிதர்பட்ட நிலைகளுக்கான திருப்பீடத்துறை.
போலந்து நாட்டின் Markowa என்னுமிடத்தில் செப்டம்பர் 10, ஞாயிற்றுக்கிழமையன்று இந்த மறைச்சாட்சிய குடும்பத்தின் ஒன்பது அங்கத்தினர்களும் அருளாளர்களாக திருஅவையில் அறிவிக்கப்பட உள்ளனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்