தேடுதல்

தூய பேதுரு பெருங்கோவில் வளாகம் தூய பேதுரு பெருங்கோவில் வளாகம்  (Vatican Media)

ஒருங்கிணைந்த பயணக்கூட்டத்தின் துவக்கமாக முன் தயாரிப்பு வழிபாடு

மாலை 5 மணி முதல் 7 மணி வரை நடைபெறும் இவ்வழிபாடானது இசையுடன் கூடிய பாடல்கள், செபங்கள் மற்றும் நன்றி வழிபாடாகவும், திருத்தந்தையின் தொடக்க உரையுடன் ஆரம்பமாக உள்ளது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

அக்டோபர் மாதம் 4 முதல் 29 வரை உரோமில் நடைபெற உள்ள 16ஆவது ஒருங்கிணைந்த பயணக் கூட்டத்தை முன்னிட்டு செப்டம்பர் 30 சனிக்கிழமையன்று வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் முன்தயாரிப்பு வழிபாடானது திருத்தந்தை, முதுபெரும்தந்தையர்கள், ஆயர்கள், பிற கிறிஸ்தவசபைகளின் தலைவர்கள், இளையோர் ஆகியோரால் இணைந்து நடைபெற உள்ளது.

ஆர்த்தடாக்ஸ், பிறகிறிஸ்தவ சபைகள், நற்செய்தி அறிவிப்பு சபைகள், என பன்னிரு பிற கிறிஸ்தவ சபை தலைவர்களுடன் திருத்தந்தை பங்கேற்க உள்ள இவ்வழிபாட்டில் உலகெங்கிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 18 முதல் 35 வயதுடைய ஏறக்குறைய 3000 இளையோர் பங்கேற்க உள்ளதாகவும் திருப்பீடம் தெரிவித்துள்ளது.

இது குறித்து நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற திருப்பீட சமூக தொடர்புத் துறையின் தலைவர், பவுலோ ருபீனி அவர்கள் கிறிஸ்தவ தலைவர்கள் மற்றும் உலகெங்கிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இளையோர் சேர்ந்து நடைபெற உள்ள இக்கூட்டமானது பிளவுபட்ட உலகில் ஒற்றுமைக்கான இடமாக, சந்திப்பாக  நிகழ உள்ளது என்று கூறினார்

"இன்றைய உலகில் நற்செய்தியை அறிவிக்கும் நோக்கத்துடன், தூயஆவியானவருக்குச் செவிசாய்த்தல், மிகவும் நெருக்கமாக ஒன்றிணைந்து நடக்கக் கற்றுக்கொள்ளுதல், ஒன்றிணைந்த தலத்திருஅவையாக மாறுதல் ஆகியவை ஆயர்களின் சவால்" என்று கூறியுள்ளார் உலக ஆயர்கள் மாமன்ற பொதுச் செயலகத்தின் நேரடி பொதுச்செயலர் அருள்சகோதரி Nathalie Becquart.

கிறிஸ்தவ ஒன்றிப்பு இல்லாமல் ஒன்றிணைந்த பயணம் இல்லை. ஒன்றிணைந்த பயணம் இல்லாமல் கிறிஸ்தவ ஒன்றிப்பு இல்லை என்று வலியுறுத்தியுள்ள அருள்சகோதரி நத்தாலியே அவர்கள், இரண்டாம் வத்திக்கானில் வேரூன்றிய ஒரு செயல்முறையின் தொடக்கமாக, ஓர் அடையாளமாக இச்செயல் இருக்கும் என்றும் கூறினார்.

மாலை 5 மணி முதல் 7 மணி வரை நடைபெறும் இவ்வழிபாடானது இசையுடன் கூடிய பாடல்கள், செபங்கள் மற்றும் நன்றி வழிபாடாகவும், திருத்தந்தையின் தொடக்கஉரை, கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும்தந்தை பர்த்தலோமியூவின் உரை, ஆயர் பிரதி நிதிகளின் உரை ஆகியவற்றை உள்ளடக்கியது என்றும் எடுத்துரைத்தார் அருள்சகோதரி நத்தாலியே.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 September 2023, 12:55