தேடுதல்

உக்ரைன் கிரேக்க கத்தோலிக்க ஆயர்களுடன் கர்தினால் பரோலின் உக்ரைன் கிரேக்க கத்தோலிக்க ஆயர்களுடன் கர்தினால் பரோலின் 

பிறரன்புப் பணிகள் மற்றும் துணிவுடன் கூடிய தலத்திருஅவை

உலகெங்கிலும் உள்ள உக்ரைன் கிரேக்க-கத்தோலிக்க தலத்திருஅவை மற்றும் சமூகங்களில் உணவு, உடைகள், மருந்துகள் போன்ற மனிதாபிமான உதவிகளுக்கான சேகரிப்பு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன

மெரினா ராஜ் - வத்திக்கான்

போர் மற்றும் அதன் தோற்றம் தொடர்பான பிரச்சினைகள் எப்போதும் ஒரு தீமை என்பதை மனதில் கொண்டு அதற்கு பதிலளிக்க வேண்டும் என்றும், வார்த்தைகளாலும் செயல்களாலும் அதன் விளைவுகளை முடிந்தவரை மட்டுப்படுத்துவது கிறிஸ்தவர்கள் மற்றும் மேய்ப்புப்பணியாளர்களாகிய நமது கடமை என்று எடுத்துரைத்தார் கர்தினால் பியெத்ரோ பரோலின்.  

செப்டம்பர் 5 செவ்வாய்கிழமை முதல் உரோமில் நடைபெற்று வரும் கிரேக்க-கத்தோலிக்க தலத்திருஅவையின் ஆயர்களுக்கான  கூட்டத்தில் பங்கேற்றுப் பேசியபோது இவ்வாறு கூறினார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ  பரோலின் .

உக்ரைன் மக்கள் மீதான திருத்தந்தையின் அன்பையும் அவர்களுக்கான முயற்சியையும் சந்தேகிப்பது நியாயமற்றது என்றும், எப்போதும் புரிந்து கொள்ளப்பட இயலாத நிலையில் நடந்துகொண்டிருக்கும் போரின் துயரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க, முறையான உரையாடல்கள் நிலையானது என்றும் வலியுறுத்தினார்.

போர்க்கைதிகளை இடமாற்றம் செய்வது, இரஷ்யாவிலிருந்து உக்ரேனிய சிறாரைத் திரும்ப பெறுவது ஆகியவை குறித்து எடுத்துரைத்த கர்தினால் பரோலின் அவர்கள், உணவுப்பொருள் ஏற்றுமதி, மனிதாபிமான உதவிப்பொருள்கள் ஆகியவற்றிற்கான ஒப்பந்தம் ஆகியவற்றில் நாடு அக்கறை கொண்டிருந்ததையும் எடுத்துரைத்தார்.

உக்ரைனில் நடந்து வரும் போர்ச்சூழலில் தலத்திருஅவை எப்படி இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தவேண்டும் என்று வலியுறுத்திய கர்தினால் பரோலின் அவர்கள், தொண்டுப் பணிகளின் வழியாக துன்பப்படுபவர்களுக்கு அருகாமையிலும், தேவைப்படுபவர்களுடன் ஒற்றுமையாகவும் இருக்கும் வகையில் செயல்பட வலியுறுத்தினார்.

உலகெங்கிலும் உள்ள உக்ரேனிய கிரேக்க-கத்தோலிக்க தலத்திருஅவை மற்றும் சமூகங்களில், உணவு, உடைகள், மருந்துகள் போன்ற மனிதாபிமான உதவிகளுக்கான சேகரிப்பு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்பதை நினைவு கூர்ந்த கர்தினால் பரோலின் அவர்கள், உரோமில் உள்ள சாந்தா சோபியா ஆலயம் அதில் தனித்து நின்று செயல்படுகின்றது என்றும் எடுத்துரைத்தார்.

நூற்றிற்கும் மேற்பட்ட கனரக வாகங்களில் கார்கிவ் மற்றும் கெர்சன் பகுதியில் வாழும் மக்களுக்கு மனிதாபிமான உதவிப்பொருகள் வழங்கி வருகின்றது என்றும், இந்த நல்ல சமாரியன் பணிக்கு உக்ரைன் காரித்தாஸ், ஸ்பேஸ் காரித்தாஸ் உடன் இணைந்து தங்களது பணியினைச் செய்து வருகின்றன என்றும் எடுத்துரைத்தார்.

ஆன்மிக ரீதியில் தங்களது செபத்தால், நாட்டின் பகுதிகளில் இறையாண்மை மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாப்பது போல், தங்கள் இதயங்களையும் பாதுகாக்க வேண்டும் என்று மக்களுக்குக் கற்பித்தது போல, வெறுப்புக்கு அடிபணியாமல், கொடிய செயல்களுக்கு இரையாகாமல், தீமையை நன்மையால் வெல்வோம் என்றும், நாம் தொடர்ந்து அன்பு செய்தால் மட்டுமே நம்மால் உறுதியாக வெல்ல முடியும் என்றும் எடுத்துரைத்தார் கர்தினால் பரோலின்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 September 2023, 09:41