தேடுதல்

கர்தினால் மத்தேயோ சுப்பி கர்தினால் மத்தேயோ சுப்பி 

உக்ரைன் அமைதிக்காக சீனாவில் கர்தினால் சுப்பி

கர்தினால் சுப்பி : அமைதிக்கான சுய உரிமைப் பாதையை தேர்ந்தெடுப்பதற்கு உக்ரைன் மக்களுக்கு இருக்கும் உரிமை மதிக்கப்பட வேண்டும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

சோவியத் தாக்குதலுக்கு உள்ளாகிவரும் உக்ரைனில் அமைதியைக் கொணரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக கர்தினால் மத்தேயு சுப்பி அவர்கள் சீனாவில் 3 நாள் பயணம் மேற்கொண்டுவருகிறார்.

உக்ரைன் நாட்டின் அமைதிக்கு முயற்சி எடுப்பதில் திருத்தந்தையின் பிரதிநிதியாகச் செயல்பட்டுவரும் இத்தாலிய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் சுப்பி அவர்கள், செப்டம்பர் 13, புதன் முதல் 15, வெள்ளிக்கிழமை வரை சீனாவில் பயணம் மேற்கொள்கிறார்.

முதலில் மனிதாபிமான நடவடிக்கைகளில் உறுதியாக இருந்து, அதன் வழியாக நீதியான அமைதிக்கு இட்டுச்செல்லும் வழிகள் குறித்து ஆராயவேண்டும் என்ற திருத்தந்தையின் நோக்கத்தின் அடுத்தப் படியாக இந்த சீன திருப்பயணம் இடம்பெறுகிறது.

செப்டம்பர் மாதம் 10 முதல் 12ஆம் தேதி வரை ஜெர்மனியின் பெர்லினில் அமைதிக்கான துணிச்சல் என்ற தலைப்பில் இடம்பெற்ற அமைதிக்கான செபக்கருத்தரங்கில் பங்குபெற்றவேளையில் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது, நீதியான, பாதுகாப்பான அமைதியை பெறுவதற்கு உழைக்கவேண்டியதன் அவசியம் குறித்தும், அமைதிக்கான சுய உரிமைப் பாதையை தேர்ந்தெடுப்பதற்கு உக்ரைன் மக்களுக்கு இருக்கும் உரிமை குறித்தும் எடுத்துரைத்திருந்தார் கர்தினால் சுப்பி.  

உக்ரைனில் அமைதியைக் கொணரும் முயற்சியின் ஒரு பகுதியாக ஏற்கனவே கர்தினால் சுப்பி அவர்கள் திருத்தந்தையின் சார்பில் இவ்வாண்டு ஜூன் 5 முதல் 6 வரை உக்ரைனின் கீவ் நகரிலும், ஜூன் 28 மற்றும் 29 தேதிகளில் இரஷ்யாவின் மாஸ்கோ நகரிலும், ஜூலை 17 முதல் 19 வரை அமெரிக்க ஐக்கிய நாட்டின் வாஷிங்டனிலும் பயணம் மேற்கொண்டு பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 September 2023, 12:38