அருளாளர்களாக அறிவிக்கப்பட உள்ள உல்மா குடும்பம்
மெரினா ராஜ் – வத்திக்கான்
யூதர்களுக்கு உதவி அவர்களை ஜெர்மன் படைகளிடமிருந்து காப்பற்றியதற்காக உல்மா குடும்பத்த்தார் அனைவரும் கொல்லப்பட்டதையடுத்து, வரும் செப்டம்பர் மாதம் அக்குடும்பத்தில் மறைச்சாட்சிகளாக மரித்த அனைவரும் அருளாளர்களாக அறிவிக்கப்பட உள்ளனர்.
செப்டம்பர் 10, ஞாயிற்றுக்கிழமையன்று போலந்தில் அருளாளர்களாக அறிவிக்கப்பட உள்ள உல்மா குடும்பத்தார், இறைவன் மீது அளவற்ற அன்பும், இரக்கப்பணிகள் செய்வதில் தளரா மனமும் கொண்டவர்கள் என எடுத்துரைக்கின்றார் அருள்பணி ரைட்டல்-அட்ரியானிக் (Rytel-Adrianik)
மறைசாட்சியாக மரித்த உல்மா குடும்பத்தாரைப் பற்றி தான் எழுதிய புத்தகத்தில் "ஹோலோகாஸ்டின் கொடிய செயலை இவர்களது மரணம் எடுத்துரைத்தாலும், அன்றாட வாழ்க்கையின் உறுதியான தன்மையில் நற்செய்தியின் ஒளியை சுடர்விடச்செய்தவர்கள் இவர்கள்‘‘ என்று குறிப்பிட்டுள்ளார் அருள்பணி அட்ரியானிக்.
இரண்டாம் உலகப்போரின் காலத்தில் யூதர்கள் ஜெர்மானியர்களால் அழிக்கப்பட்டு வந்த நேரத்தில் அடைக்கலம் தேடி வந்த யூதர்களுக்கு, தந்தை ஜோசப் உல்மா, தாய் நிறைமாத கர்ப்பிணியான விக்டோரியா, அவர்களின் 6 பிள்ளைகள் உள்ள குடும்பமானது ஆதரவு அளித்த நிலையில் படைவீர்களால் அவர்களது குடும்பம் முழுதும் அழிக்கப்பட்டது.
போலந்தின் மர்க்கோவாவில் வாழ்ந்த இக்குடும்பம் மிகவும் அன்பானவர்களாக, கிறிஸ்தவ பக்தி உடையவர்களாக, எல்லாருக்கும் உதவும் நல்ல சமாரியர்களாகப் போற்றப்பட்ட நிலையில், 8 யூதர்களுக்கு நட்புறவுடன் தங்குமிடம் உணவு போன்றவற்றை அளித்து பாதுகாத்து வந்தனர்.
நாசிசப் படைகளுக்கு இவர்களின் செயல் தெரியவர, தாய் தந்தையர், குழந்தைகளின் முன் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதன்பின் பிள்ளைகள் 6 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். தாயின் வயிற்றில் இருந்த குழந்தை உட்பட உல்மா குடும்பத்தில் மறைசாட்சியாக இறந்த அனைவரும் திருவழிபாட்டு மகிமையில் உயர்த்தப்பட இருக்கின்றனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்