தேடுதல்

திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்  

அகில உலகிற்கும் ஒரு நம்பிக்கையின் திருப்பயணம்

கர்தினால் பரோலின் : திருத்தந்தையின் மங்கோலியா திருப்பயணத்தின் மூன்று மூலைக்கற்களாக அமைதி, சந்திப்பு, கலந்துரையாடல் ஆகியவை இருக்கும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

கத்தோலிக்கர்கள் மிகச்சிறிய அளவில் வாழும் மங்கோலியாவில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாரத்தில் திருத்தூதுப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளது, அகில உலகிற்கும் ஒரு நம்பிக்கையின் திருப்பயணமாக இருக்கும் என தெரிவித்தார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.

ஆகஸ்ட் 31 அன்று வத்திக்கானிலிருந்து கிளம்பி செப்டம்பர் 4ஆம் தேதி வரை மங்கோலியாவில் மேற்கொள்ளவிருக்கும் திருத்தந்தையின் திருத்தூதுப்பயணம் குறித்து வத்திக்கான் செய்திகளுக்கு பேட்டியளித்த கர்தினால் பரோலின் அவர்கள், மங்கோலியாவின் மிகச் சிறிய, அதேவேளை உயிர்துடிப்புடைய கத்தோலிக்க சமூகத்தின் விசுவாசத்தை உறுதிப்படுத்துவதாக திருத்தந்தையின் இந்த திருத்தூதுப்பயணம் இருக்கும் என்றார்.

திருத்தந்தையின் இந்த திருப்பயணத்தின் மூன்று மூலைக்கற்களாக அமைதி, சந்திப்பு, கலந்துரையாடல் ஆகியவை இருக்கும் எனவும் எடுத்துரைத்த கர்தினால் பரோலின் அவர்கள், புத்த மத பாரம்பரியத்தைக் கொண்ட இந்த நாட்டில் மதங்களுக்கிடையேயான கலந்துரையாடல்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை எனவும் தெரிவித்தார்.

பல நூற்றாண்டுகளாக ஒன்றுமேயில்லாது இருந்த கத்தோலிக்கர்களின் மங்கோலிய பிரசன்னம், 1990ஆம் ஆண்டுகளில் நாடு ஜனநாயகத்தை நோக்கித் திரும்பியதிலிருந்து ஓரளவு வளர்ந்து, பிறரன்பில் மக்களை அரவணத்து வருகின்றது என்றார் திருப்பீடச் செயலர்.

உடன்பிறந்த உணர்வுடன் செயல்பட்டுவரும் மங்கோலிய கத்தோலிக்க திருஅவை, மதங்களிடையேயான உரையாடலிலும் கிறிஸ்தவ சபைகளுக்கிடையேயான கலந்துரையாடல்களிலும் சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறது என்ற கர்தினால் பரோலின் அவர்கள்,  திருத்தந்தை தன் திருப்பயணத்தின்போது செப்டம்பர் 3ஆம் தேதி பிறமதத் தலைவர்களை சந்திக்கவிருப்பதும், அமைதியையும் உடன்பிறந்த உணர்வு நிலையையும் ஊக்குவிக்கும் நோக்கம் கொண்டதாக உள்ளது என தெரிவித்தார்.

சீனாவில் திருத்தூதுப் பயணம் மேற்கொள்வதற்கு திருத்தந்தை கொண்டிருக்கும் ஆவல் இன்னும் உயிரோட்டமாக இருக்கிறது என்பதையும் தெரிவித்தார் திருப்பீடச் செயலர் கர்தினால் பரோலின்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 August 2023, 15:01