தேடுதல்

திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்  

இளையோர் விழா சிலரின் வாழ்வை மாற்றவல்லதாக இருக்கும்

திருத்தந்தையின் பாத்திமா திருத்தல சந்திப்பு நோயாளிகளுடன் நெருக்கத்தையும் அமைதிக்கான செபத்தையும் வெளிப்படுத்துவதாக இருக்கும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

லிஸ்பனில் இடம்பெறும் உலக இளையோர் தினக் கொண்டாட்டங்கள் இயேசுவுடன் நெருங்கிய உறவுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் எனவும், திருத்தந்தையின் பாத்திமா திருத்தல சந்திப்பு நோயாளிகளுடன் நெருக்கத்தையும் அமைதிக்கான செபத்தையும் வெளிப்படுத்துவதாக இருக்கும் எனவும் தெரிவித்தார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.

ஆகஸ்ட் 2ஆம் தேதி உலக இளையோர் தினக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள திருத்தந்தை புறப்பட உள்ள நிலையில், வத்திக்கான் செய்திகளுக்கு நேர்முகம் ஒன்றை வழங்கிய கர்தினால் பரோலின் அவர்கள், கோவிட் பெருந்தொற்று இடைவெளிக்குப்பின் இடம்பெறும் இந்த 37ஆவது இளையோர் தினக் கொண்டாட்டங்கள் சக்தியுடையதாக, ஒரு சிலரின் வாழ்வை மாற்றவல்லதாக இருக்கும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார்.

தனது 42ஆவது வெளிநாட்டுத் திருப்பயணமாக போர்த்துக்கல் சென்று இளையோர் தினக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகம் முழுவதும் இருந்து வந்து, விசுவாசக் கொண்டாட்டத்தில் லிஸ்பனில் கலந்துகொள்ளும் இளையோருடன் தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வதோடு, பாத்திமா நகரில் நோயுற்றோருடன் தன் நெருக்கத்தை வெளிப்படுத்தி, உலக அமைதிக்கான தன் அர்ப்பணத்தையும் வெளிப்படுத்துவார் என்றார் கர்தினால் பரோலின்.

இத்தகைய கொண்டாட்டங்கள் வழியாக நாம் வளர்கிறோம் என்பதை பலமுறை வலியுறுத்தியுள்ள திருத்தந்தை, இந்நாளுக்காக ஆவலுடன் காத்திருப்பதைக் காண முடிகிறது எனவும் எடுத்துரைத்தார் கர்தினால் பரோலின்.

கோவிட் பெருந்தொற்றின் பாதிப்பு, எண்ணற்ற ஆயுத மோதல்கள் என இன்றைய சமூகம் பெரும் மாற்றங்களைக் கண்டுவரும் நிலையில், இளையோருக்கு இயேசுவின் முகத்தை வெளிப்படுத்தவும், அவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் வேண்டிய தேவை அதிகம் அதிகமாக உள்ளது என மேலும் எடுத்துரைத்த திருப்பீடச் செயலர், பல்வேறு கலாச்சார, மொழி, வாழ்க்கைமுறை ஆகிய பின்னணிகளுடன் லிஸ்பன் வந்துள்ள இளையோர், தங்களிடையே கத்தோலிக்க அனுபவங்களைப் பகிரவும், அதனால் வளம்பெறவும் முடியும் எனவும் தன் நேர்முகத்தில் கூறினார்.

போர்கள், ஏழ்மை, பாராமுகம், கைவிடப்படல், சுயநலம், மதச்சார்பின்மை போன்ற சவால்களை சந்திக்கும் இளையோர், தாங்கள் இதற்குத் தீர்வாக முன்வைக்கும் பரிந்துரைகளிலிருந்து திருஅவையும் நிறையக் கற்றுக் கொள்ளமுடியும் எனவும் எடுத்துரைத்தார் கர்தினால் பரோலின்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 August 2023, 14:56