தேடுதல்

அமைதியின் அடையாளமாக மரக்கன்று நடும் கர்தினால் பியெத்ரோ பரோலின் அமைதியின் அடையாளமாக மரக்கன்று நடும் கர்தினால் பியெத்ரோ பரோலின்  

கிறிஸ்துவையும், மரியாவையும் உற்றுநோக்குங்கள்!

தென்சூடான் மக்களே, நீங்கள் அன்னையின் வழியில் உலகமனைத்திற்கும் ஆறுதல் மற்றும் நம்பிக்கையின் அடையாளமாகத் திகழ்ந்திடுங்கள் : கர்தினால் பியெத்ரோ பரோலின்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

பணிவான சேவையே பழிவாங்கும் வாதையை வெல்ல முடியும் என்றும் நம்பிக்கை, பிறரன்பு பணிகள், பணிவு ஆகியவையே நற்செய்தியின் பாதை என்றும் கூறினார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.

தென்சூடான் நகரமான மலக்கலில் நிறைவேற்றிய அன்னை மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாத் திருப்பலியில் இவ்வாறு வேண்டுகோள் விடுத்த கர்தினால் பரோலின் அவர்கள், பழிவாங்கும் எண்ணங்களை ஒதுக்கிவிட்டு அமைதியை ஏற்படுத்தும் பணிவான சேவையை அரவணைத்துக்கொள்ளுமாறு அனைவருக்கும் அழைப்புவிடுத்தார்.

இவ்வாண்டு பிப்ரவரி மாதத்தில் தெற்கு சூடானுக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்ட திருத்தூதுப் பயணத்தின் ஒளிமயமான நினைவுகளை அவர் இன்னும் தன்னுள் கொண்டுள்ளார் என்று கூறிய கர்தினால் பரோலின் அவர்கள், இந்த நாட்டையும், அதன் மக்களையும் அவர்களின் துயரங்களையும், காயங்களையும் மட்டுமன்றி, அவர்களின் எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் அவர் தன் இதயத்தில் சுமந்துள்ளார் என்றும் எடுத்துரைத்தார்.

இந்நாட்டிற்கான தனது பயணம், உலகளாவியத் திருஅவையின் ஒன்றிப்பு, மற்றும் உடனிருப்பைத் தெரிவிக்க முயல்கிறது என்று சுட்டிக்காட்டிய கர்தினால் பரோலின் அவர்கள், நாம் அனைவரும் கிறிஸ்துவில் ஒன்றுபட்டிருப்பதால் எந்தயொரு கிறிஸ்தவரும் தனியாக இல்லை என்பதை தென் சூடான் மக்களுக்கு நினைவூட்ட விரும்புவதாகவும் கூறினார்.

திருஅவையில் உள்ள ஓர் ஆணோ அல்லது பெண்ணோ பதிப்பிற்குள்ளாகும்போது அவர் அனைவரின் கவனத்தையும் அன்பையும் பெறுவதற்கு முழு உரிமையுள்ளவர் என்று எடுத்துக்காட்டிய கர்தினால் பரோலின் அவர்கள், திருஅவை உங்கள்மீது கொண்டுள்ள கவனத்தையும், அக்கறையையும், அன்பையும் நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

தென்சூடானின் சொந்த உள்நாட்டுப் போர் உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களைப் பாதிக்கும் பல்வேறு போர்கள் குறித்து தனது கவலையை வெளிப்படுத்திய கர்தினால் பரோலின் அவர்கள், மோதலின் காரணமாக வீடுகளை விட்டு வெளியேறிய பலரை அவர் நினைவு கூர்ந்தததுடன், இது அவர்களின் சமூகங்களை அழிக்கும் மிகப்பெரும் கொள்ளைநோய் என்றும் குறிப்பிட்டார்.

இருப்பினும், அன்னை மரியாவின் விண்ணேற்பு கிறிஸ்தவர்களுக்குத் தீமை என்பது ஒருபோதும் இறுதியானது இல்லை என்பதையும், மற்றவர்களை அவமானப்படுத்துபவர்களின் வலிமை விரைவில் முடிவுக்கு வரும் என்பதையும் நினைவூட்டுகிறது.  ஏனென்றால் அவர்களின்  பெருமை, ஆயுதங்கள் மற்றும் பணம் அவர்களைக் காப்பாற்றாது என்றும் எடுத்துரைத்தார்.

கடவுள் மீதான நம்பிக்கை ஒருபோதும் ஏமாற்றத்தைக் கொடுக்காது என்பதை நினைவில் கொள்ளும் விதத்தில், தெற்கு சூடான் மக்கள் அனைவரும் கிறிஸ்துவையும் அவருடைய அன்னை மரியாவையும் உற்றுநோக்கும்படி அவர்களை ஊக்குவித்த கர்தினால் பரோலின் அவர்கள், இதுவே கிறிஸ்தவர்களின் இறைநம்பிக்கையையும் அமைதிக்கானப் பணிவான சேவையின் உறுதியான செயல்களையும் இணைக்கிறது என்றும் சுட்டிக்காட்டினார்.

இறைநம்பிக்கை, பிறரன்பு பணிகள், பணிவு ஆகியவையே நற்செய்தியின் பாதை என்றும், இதுவே அன்னை மரியா பயணித்த பாதை, இப்பாதையே அவரை அரசியாகத் தன் மகன் இயேசுவின் வலது பக்கத்தில் ஒளிமயமான இடத்தில் அமரச் செய்தது என்றும் எடுத்துக்காட்டிய கர்தினால் பரோலின் அவர்கள், நீங்கள் அன்னையின் வழியில் உலகமனைத்திற்கும் ஆறுதல் மற்றும் நம்பிக்கையின் அடையாளமாகத் திகழ்ந்திடுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.

தெற்கு சூடானில் தனது இரண்டாவது நாள் பயணத்தின்போது Upper நைல் மாநிலத்தில் உள்ள வடக்கு நகரமான மலாக்கலுக்குச் சென்றார், அங்கு அவர் புனித வளனார் பேராலயத்தில் நடைபெற்றத் திருப்பலிக் கொண்டாட்டத்தில் பங்குபெற்றார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 August 2023, 13:58