கொரியாவிலிருந்து மனிதாபிமான உதவிப் பொருட்கள் உக்ரைனுக்காக..
மெரினா ராஜ் – வத்திக்கான்
திருத்தந்தையின் வேண்டுகோள்களுக்கு இணங்க, கொரியாவிலிருந்து புதிதாக வந்த மனிதாபிமான உதவிப் பொருட்கள் உக்ரைனுக்கு விரைவில் அனுப்பப்பட உள்ளன என்றும், இரண்டு கனரக வாகனங்களில் உணவுப்பொருட்கள் உக்ரைனின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட இருக்கின்றன என்றும் தெரிவித்தார் கர்தினால் கோன்ராடு கிரயேவிஸ்கி.
உக்ரைன் மக்களுக்காகத் தொடர்ந்து செபிக்கவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை உணவுப் பொருட்கள் வழங்கவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருவதற்கிணங்க கொரியாவின் பெரிய தொண்டு நிறுவனம் உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிப் பொருட்களைத் திருத்தந்தையின் பிறரன்புப் பணி அமைப்பிற்கு அனுப்பி வைத்துள்ளது என்று வத்திக்கான் செய்திகளுக்குக் கூறினார், திருப்பீடத்தின் பிறரன்புப் பணிகளுக்குப் பொறுப்பான கர்தினால் Konrad Krajewski.
கொரியாவிலிருந்து வந்த மனிதாபிமான உதவிப்பொருட்களை உக்ரைனுக்கு அனுப்பி வைக்க ஏறக்குறைய 39 வீடற்ற மக்கள் தன்னார்வலர்களாக உதவுகின்றார்கள் என்றும், உணவு நன்கொடைகள் நிரப்பப்பட்ட இரண்டு கனரக வாகனங்கள் உக்ரைனுக்கு வரும் வாரத்தில் அனுப்பி வைக்கப்படும் என்றும் கூறினார் கர்தினால் Konrad Krajewski
திருத்தந்தை பிரான்சிஸின் அண்மைய மனிதாபிமான முன்முயற்சியினால் ஒரு பெரிய கொரிய நிறுவனம் போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்காக ஏறக்குறைய 3,00,000 உறையவைக்கப்பட்ட உணவுப்பொருட்களை வத்திக்கானுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்தார் கர்தினால் Krajewski.
போர் தொடங்கியதில் இருந்து 106 முறை உக்ரைனுக்கு மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான உதவியின் ஒரு பகுதியாக இம்முறை இவ்வுணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளன என்றும், 100க்கும் மேற்பட்ட வாகனங்களில் பொருட்கள் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார் கர்தினால் Krajewski
"துன்பத்தில் இருப்பவர்கள் தாங்கள் தனியாக இல்லை என்பதை அறிவது மிகவும் முக்கியமானது என்றும், அவர்கள் திருத்தந்தையால் ஏதோவொரு விதத்தில் அன்பு செய்யப்படுகின்றார்கள் மற்றும் தொடப்படுகிறார்கள் என்பதை வெளிப்படுத்தும் விதமாக இத்தொண்டுப்பணிகள் ஆற்றப்படுகின்றன‘‘ என்றும் எடுத்துரைத்தார் கர்தினால் Krajewski.
திருஅவை வேறுபாடு காட்டாது அனைவருக்கும் சமமாக உதவுகின்றது, மக்களின் தாராள மனப்பான்மையின் பலனாக இருக்கும் கொடைகளை, இல்லாதவர்கள் மற்றும் தேவையில் இருப்பவர்களுக்கு கொடுத்து உதவுகின்றது என்றும் கூறினார் கர்தினால் Krajewski.
"உதவிப்பொருட்களைக் காட்டிலும் உடனிருப்பதன் வழியாக சாட்சியமளிப்பது மிக முக்கியம்" என்றும், போரினால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக விரைவில் ஓர் இல்லம் கட்டப்படும் என்றும் எடுத்துரைத்த கர்தினால் Krajewski அவர்கள், குளிர்காலம் துவங்கும் முன் தேவையில் இருக்கும் மக்களின் வாழ்க்கை நிலை சரிசெய்யப்பட தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும் கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்