நல்ல சமாரியன் போல வாழ்வோம் - கர்தினால் செர்னி
மெரினா ராஜ் – வத்திக்கான்
ஒரு நல்ல சமாரியன் போல உலகில் காயம்பட்டவர்களைச் சந்திப்பதன் வழியாகவும், அவர்களை நம் தோளில் சுமந்து, அவர்களுக்குத் தேவையானதை வழங்குவதன் வழியாகவும், அவர்களை மீண்டும் எழச்செய்து, அன்பான குழந்தைகளாக வாழ்வதற்கான மாண்பை மீட்டெடுக்க முடியும் என்று கூறியுள்ளார் கர்தினால் மைக்கேல் செர்னி.
ஆகஸ்ட் 8, செவ்வாய்க்கிழமை தொடங்கி 11, வெள்ளிக்கிழமை வரை அமேசான் பகுதியின் மனாஸில் நடைபெறும் CEAMA எனப்படும் அமேசான் தலத்திருஅவை மாநாட்டில் பங்கேற்றுப் பேசியபோது இவ்வாறு கூறியுள்ளார் ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீடத் துறையின் தலைவர் கர்தினால் மைக்கேல் செர்னி.
நாம் பெற்ற திருமுழுக்கு அருளடையாளத்திலிருந்து பிறக்கும் நமது பணி, கடவுளின் மக்களுக்கும் நற்செய்தியின் அடிப்படையில் அமைந்த பணிச்செயல்களுக்கும் அடையாளமாக இருப்பதற்கான மாண்பினை மீட்டெடுக்கின்றது என்று கூறியுள்ள கர்தினால் செர்னி அவர்கள், பூர்வீக பழங்குடி இன மக்களின் முகத்தை அடையாளம் கண்டு, அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எளிய மக்களின் இருப்பு மற்றும் உணர்வை ஒருங்கிணைக்கும் வகையில் திருஅவைக் கட்டமைப்புகளை நமது வாழ்வு, பணி என அனைத்து மட்டங்களிலும் சீர்திருத்துவது நமது கடமை என்றும், இதனால், இறைமக்களின் பன்முகத்தன்மையை வளர்க்கவும் மீட்டெடுக்கவும் நம்மால்முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார் கர்தினால் செர்னி.
திருஅவையில் ஒவ்வொரு மனிதனுக்கும், படைப்பு அனைத்திற்கும் இடம் உள்ளது என்று வலியுறுத்தியுள்ள கர்தினால் செர்னி அவர்கள், மீட்பின் மகிழ்ச்சியை வாழ பழையவற்றை விட்டுவிடுவது அவசியம் என்றும், உடன்பிறந்த உறவின் ஒற்றுமையைத் தடுக்கும் செயல்கள் அடையாளம் காணப்பட்டு தடுக்கப்பட வேண்டும் என்றும் எடுத்துரைத்துள்ளார்.
அனைத்து மனிதகுலத்திற்கும் அமேசானின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும், ஏழைகளுக்கு சாதகமாகவும் பொது நன்மைக்காகவும் பணியாற்றும் செயல்திட்டங்களை உருவாக்க வேறுபட்ட முன்னுரிமைகள் கொண்ட ஒரு கூட்டு ஆயர் பராமரிப்பை நிறுவ வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார் கர்தினால் செர்னி.
நமது வாழ்வை நாம் அன்பில் முதலீடு செய்யாவிட்டால், நம் வாழ்க்கை அணைந்த விளக்காக மாறிவிடும் என்று வலியுறுத்திய கர்தினால் செர்னி அவர்கள், நம்முடைய ஆறுதல் தேடும் மனநிலையை விட்டு வெளியேறி, புதியவற்றில் நம்பிக்கையுடன் செயல்படுவதற்கான சுதந்திரத்தை கடவுள் கொடுக்கின்றார் என்ற துணிவுடன் செயல்படவும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்