தேடுதல்

திருத்தந்தையுடன் புலம்பெயர்ந்தோர் திருத்தந்தையுடன் புலம்பெயர்ந்தோர்  

ஊடகவியலாளர்களே உறவுப் பாலங்களைக் கட்டியெழுப்புங்கள்

ஆபிரிக்க கண்டத்திலுள்ள உகாண்டா புலம்பெயர்ந்தோரை ஆதரிப்பதில் மிகப்பெரிய நாடாகவும், அவர்களை வரவேற்பதில் உலகில் நான்காவது நாடாகவும் திகழ்கிறது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

ஆப்பிரிக்கக் கத்தோலிக்க ஊடகவியலாளர்கள் சுவர்களை அல்ல, உறவு பாலங்களைக் கட்டியெழுப்ப உதவ வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார் திருப்பீடத் தகவல் தொடர்புத்துறையின் தலைவர் Paolo Ruffini.

ஜூலை 11, இச்செவ்வாயன்று, ஆப்பிரிக்கக் கத்தோலிக்க ஊடகப் பயிற்சியாளர்களின் ஒரு வார கால மாநாடு உகாண்டாவின் தலைநகர் கம்பாலாவில் Kampala தொடங்கி நடைபெற்று வரும் வேளை, அதன் பங்கேற்பாளர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு உரைத்துள்ள Ruffini அவர்கள், இடம்பெயர்ந்தோர் மற்றும் புலம்பெயர்ந்தோருக்குத் அளித்துவரும் தனித்துவமான ஆதரவிற்காக உகாண்டா நாட்டிற்கு அவர் பாராட்டுத் தெரிவித்தார்.

அதே கூட்டத்தில் உரையாற்றிய உகாண்டா ஆயர் பேரவையின் தலைவரும், கியின்டா-மித்யானா மறைமாவட்ட ஆயருமான Joseph Anthony Zziwa அவர்கள், இடம்பெயர்வு என்பது ஒரு புதிய நிகழ்வு அல்ல, மாறாக, அதுவொரு தொடரும்  நிகழ்வு என்று அதன் பங்கேற்பாளர்களிடம் கூறினார்.

மோசே விடிவிக்கும் வரை இஸ்ரயேல் மக்கள் எகிப்தில் எவ்வாறு இடம்பெயர்ந்தோராகவும் அடிமைகளாகவும் வாழ்ந்தனர் என்பதை எடுத்துகட்டிப் பேசிய ஆயர் Zziwa அவர்கள், சமூகத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தில் ஆக்கப்பூர்வமான பங்கை வகிக்க கத்தோலிக்க ஆப்பிரிக்க ஊடகங்களை அவர் ஊக்குவித்தார்.  

உகாண்டாவின் டெசோ விவகார அமைச்சர் திரு கென்னத் ஒகாலோ ஓபோட் அவர்கள், 1942 மற்றும் 1944-ஆம் ஆண்டுகளுக்கிடையே 7000 போலந்து புலம்பெயர்ந்தோர், அதிலும் முக்கியமாக பெண்கள் மற்றும் குழந்தைகள் இரண்டாம் உலகப் போரின் போது உகாண்டாவில் தஞ்சம் அடைந்தவேளை, ​​அவர்களுக்கு ஆதரவளித்த அந்நாட்டின் நீண்ட வரலாற்றைக்  குறித்துப் பேசினார்.

பேராசிரியர் Walter IHEJIRIKA  மற்றும், SIGNIS அமைப்பின் அனைத்துலகத் தலைவரும் ஆப்பிரிக்கத் தலைவருமான திருமதி ஹெலன் ஒஸ்மான் ஆகியோரும் இம்மாட்டின் தொடக்கவிழாவில் உரையாற்றினர்

ஆப்ரிக்க SIGNIS அமைப்பும் ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவையும் இணைந்து நடத்தும் இம்மாட்டில் பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த 50 பத்திரிகையாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 July 2023, 13:24