கடல்பணியாளர்களுக்காக கத்தோலிக்கர்கள் செபிக்க வேண்டிய தேவை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
இவ்வாண்டு ஜூலை மாதம் 9ஆம் தேதி, அதாவது, ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மாதம் இரண்டாம் ஞாயிறன்று திருஅவையில் சிறப்பிக்கப்படும் கடல் ஞாயிறுக்கான செய்தியை ஜூலை 3ஆம் தேதி திங்களன்று வெளியிட்டுள்ளது திருப்பீடம்.
துவக்க காலத்தில் உலகின் ஒவ்வொரு மூலைக்கும் நற்செய்தியை எடுத்துச்செல்ல கப்பல்கள் உதவியுள்ளன என்பதை சுட்டிக்காட்டித் துவங்கும் இச்செய்தி, புதிய ஏற்பாட்டு நூலின் திருத்தூதர் பணி ஏடும் ஏனைய ஏடுகளும் நற்செய்திப் பணியாளர்களோடும் கடல்பயணங்களோடும் பின்னிப்பிணைந்துள்ளதைக் காட்டுகின்றன என உரைக்கிறது.
கப்பல்களில் பணியாற்றி உலகமனைத்திற்கும் பொருட்களை எடுத்துச் செல்ல உதவும் பல இலட்சக்கனக்கான கடல்பணியாளர்களுக்காக கத்தோலிக்கர்கள் செபிக்க வேண்டியதன் தேவையை இந்த கடல் ஞாயிறு நினைவுபடுத்தி நிற்கிறது என தன் செய்தியில் கூறியுள்ள ஒருங்கிணைந்த மனித வளர்ச்சியை ஊக்குவிக்கும் திருப்பீடத்துறை, நம் வாழ்வு சுமுகமாக இயங்குவதற்கும் பொருளாதாரம் நிலையான தன்மையைக் கொண்டிருக்கவும் கப்பல்களில் பணியாற்றுவோர் உதவுகின்றனர் எனவும் தெரிவிக்கிறது.
இயேசு படகிலேறி போதித்து மக்களை தம் பால் கொண்டுவந்ததைக் குறித்து அறிந்துள்ள நாம், ஞாயிறு திருப்பலிகளில்கூட கலந்துகொள்ள முடியாமலும், தங்கள் குடும்பங்களை சந்திக்க முடியாமலும் கப்பல்களில் பணியாற்றிவருவோர் குறித்து இந்நாட்களில் அதிகம் அதிகமாக சிந்தித்துப் பார்ப்போம் என அழைப்பு விடுத்துள்ளது இத்திருப்பீடத்துறை.
ஒருங்கிணைந்த மனித வளர்ச்சியை ஊக்குவிக்கும் திருப்பீடத்துறையின் தலைவர், இயேசுசபை கர்தினால் Michael Czerny அவர்கள் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள இச்செய்தி, கடல் பணியாளர்களின் அருகில் திருஅவை இருக்கிறது என்பதை உறுதிசெய்வதுடன், கடல்பணியாளர்கள் தங்கள் அனுபவங்களை, சான்றுகளை, பணி குறித்தக் கண்ணோட்டத்தை, பொருளாதார மதிப்பீடுகளை, பல்வேறு கலாச்சாரங்களுக்கும் மதங்களுக்கும் இடையேயிருக்கும் உறவை, அவர்களின் விசுவாசத்தை திருஅவையுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறது எனவும் தெரிவிக்கிறது.
இவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதன் வழி திருஅவைக்கும், அதன் வழி சமுதாயத்திற்கும் உதவமுடியும் எனவும் எடுத்துரைக்கிறது இச்செய்தி.
ஒன்றிணைந்து நடைபோடும் திருஅவையில் இருக்கும் நாம் ஒருவர் மற்றவரின் அனுபவங்களையும் விசுவாசத்தையும் பகிர்வதன் வழியாக ஒருவருக்கொருவர் நெருக்கமாக வரமுடியும் என, இம்மாதம் 9ஆம் தேதி சிறப்பிக்கப்படும் கடல் ஞாயிறுக்கான செய்தியில் தெரிவித்துள்ளது, ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத்தை ஊக்குவிப்பதற்கான திருப்பீடத்துறை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்