தேடுதல்

திருப்பீடச் செயலர், கர்தினால் பரோலின் திருப்பீடச் செயலர், கர்தினால் பரோலின்   (AFP or licensors)

வன்முறை சூழல்களில் இருந்து குழந்தைகளை விலக்கி வையுங்கள்

போராலும், வெளிநாடுகளுக்கு குடிபெயர்தல் முயற்சிகளாலும் உயிரிழக்கும் குழந்தைகள் குறித்து நாம் அக்கறை எடுத்தோமானால் நல்ல பலனுள்ள தீர்வைக் காணமுடியும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

வன்முறைச் சூழல்களில் இருந்து குழந்தைகளை விலக்கி வையுங்கள் என்ற அழைப்பை விடுத்துள்ள திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், போர் மற்றும் புலம்பெயர்தலின் சோகங்களிலிருந்து சிறார்களைக் காப்பாற்ற அனைத்துலக அர்ப்பணம் தேவைப்படுகிறது என விண்ணப்பம் ஒன்றையும் விடுத்துள்ளார்.

இம்மாதம் முதல் வார இறுதியில் சிறப்பிக்கப்பட்ட புனித மரிய கொரற்றியின் திருத்தலம் இருக்கும் இத்தாலியின் நெத்துனோவுக்குச் சென்ற கர்தினால் பரோலின் அவர்கள், போராலும், வெளிநாடுகளுக்கு குடிபெயர்தல் முயற்சிகளாலும் உயிரிழக்கும் குழந்தைகள் குறித்து நாம் ஒவ்வொருவரும் அக்கறை எடுத்தோமானால் அதற்கு நல்ல பலனுள்ள தீர்வைக் காணமுடியும் என எடுத்துரைத்தார்.

உக்ரைனிலிருந்து இரஷ்யாவிற்குள் எடுத்துச் செல்லப்பட்ட சிறார்களை அவர்களின் சொந்த நாட்டிற்குள் திரும்பக் கொண்டுவருவதற்கு திருப்பீடம் தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுவருவதாக உரைத்த கர்தினால் பரோலின் அவர்கள், மத்தியதரைக் கடலில் படகு விபத்துக்களால் உயிரிழப்பவர்களைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகளையும் திருப்பீடம் கைவிடவில்லை என்றார்.

இளம் வயதிலேயே பாலியல் அத்துமீறல் முயற்சியின்போது தன் கற்பை காப்பாற்றும் போராட்டத்தில் உயிரிழந்த புனித சிறுமி மரிய கொரற்றியின் வாழ்வு, குழந்தைகள் காப்பாற்றப்பட வேண்டிய நம் கடமையை வலியுறுத்தி நிற்கின்றது என்றார் திருப்பீடச் செயலர் கர்தினால் பரோலின்.

இன்றைய குழந்தைகளே நாளைய வருங்காலம் என்பதை மனதில்கொண்டு, அவர்கள் அத்துமீறல்களின் மற்றும் வன்முறைகளின் பாதிப்புகளில் இருந்து விலகியிருப்பதை உறுதிச் செய்யவேண்டியது நம் கடமை என்றார் கர்தினால்.

ஏறக்குறைய 19,000 உக்ரேனிய சிறார் இரஷ்யாவுக்கு கடத்திச் செல்லப்பட்டது குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ள திருப்பீடம், அவர்களை அவர்களின் சொந்த நாட்டிற்குள் கொண்டுவருவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும், இரஷ்யாவின் கடந்த 16 மாதங்களுக்கு மேலான அடக்குமுறைகளால் துயர்களை அனுபவித்துவரும் உக்ரேனிய சிறார்கள் குறித்து மறக்கவில்லை எனவும் திருப்பீடச் செயலர், கர்தினால் பரோலின் அவர்கள் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 July 2023, 13:39