தேடுதல்

திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரொ பரோலின் திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரொ பரோலின்  

அமைதி என்னும் தூண்கள் இல்லா கட்டிடம் எளிதில் விழுந்துவிடும்

அணு ஆயுதங்களை வைத்திருப்பது, அதனைப் பயன்படுத்துவது ஒழுக்கக்கேடானது ஏனெனில் அது மனிதனின் அழிவையும் உலக அழிவையும் குறிக்கிறது. - கர்தினால் பரோலின்

மெரினா ராஜ் - வத்திக்கான்

அமைதியானது வீட்டைத் தாங்கும் தூண்கள் போன்றது இந்த தூண்கள் இல்லாமல் எழுப்பப்படும் கட்டிடம் எளிதில் விழுந்துவிடும் அபாயம் உள்ளது என்றும், உண்மை என்பது பரஸ்பர உரிமைகள் மற்றும் பரஸ்பர கடமைகளை ஏற்றுக்கொள்வது என்றும்  எடுத்துரைத்துள்ளார் கர்தினால் பியெத்ரோ பரோலின்.

ஜூலை 6 வியாழன் அன்று இத்தாலியின் ராய் 1 தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலின் போது கேட்கப்பட்ட போர், அணுசக்தி அதிகரிப்பு, கர்தினால் ஷூப்பியின் கீவ் பயணம், உக்ரைன் சிறார் மீட்பு, நாட்டின் அமைதி, ஐக்கிய நாடுகளின் சபை, கலாச்சார அழிவு, இஸ்ரயேல் தாக்குதல், மற்றும் குடும்பம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்தபோது இவ்வாறு கூறியுள்ளார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்

பனிப்போர் காலத்தைப் போல் உலகம் பிளவுபட்ட நிலைக்குத் திரும்பும் அபாயம் உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த கர்தினால் பரோலின் அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அடிக்கடி கூறுவது போல நாம் பனிப்போர் காலத்தைக் கடந்து மூன்றாம் உலகப்போரின் ஒரு பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்றும், போர் மற்றும் மோதல்கள் துன்பத்திற்கே வழிவகுக்கின்றன என்றும் கூறியுள்ளார்.

அணு ஆயுதங்களை வைத்திருப்பது, அதனைப் பயன்படுத்துவது ஒழுக்கக்கேடானது, ஏனெனில் அது மனிதனின் அழிவையும் உலக அழிவையும் குறிக்கின்றது என்று எடுத்துரைத்துள்ள கர்தினால் பரோலின் அவர்கள் ஆயுதக் கிடங்குகளை அகற்ற ஒரு தீவிரமான திட்டத்தைத் தொடங்குவதே அதனைத் தடுப்பதற்கான ஒரே வழி என்று தான் நினைப்பதாகவும் கூறியுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் முன்மொழியப்பட்ட உலகளாவிய முயற்சியின் ஒரு பகுதியாக மாஸ்கோவுக்குச் சென்ற கர்தினால் ஷூப்பி அவர்களின் பணி மனிதாபிமான பக்கத்தில் அதிக கவனம் செலுத்தியதாகவும், பன்னாட்டு அமைப்புக்களின் உதவியுடன் உக்ரைன் சிறாரை மீண்டும் சொந்த நாட்டிற்கு மீட்டு வருவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார் கர்தினால் பரோலின்.

திருஅவை வலியுறுத்தும் பன்னாட்டு சட்டத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய கர்தினால் பரோலின் அவர்கள், உரையாடல், பேச்சுவார்த்தை, நீதியின் பாதை, எல்லைகளை அங்கீகரிப்பது, மக்களின் உரிமை, சிறுபான்மையினருக்கு மரியாதை, போன்றவைகளை மதித்து நடக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இஸ்ரயேல் தாக்குதல், குடிபெயர்ந்தோர் மற்றும் புலம்பெயர்ந்தோர், கலாச்சார அழிவு, குடும்பப் பிரச்சனைகள் போன்ற எல்லாவற்றிற்கும் உரையாடல் முறை சிறந்தது  என்று எடுத்துரைத்துள்ள கர்தினால் பரோலின் அவர்கள், மதசுதந்திரம் என்பது மனித உரிமைகளின் தூண்கள் என்றும்,  குடும்பம் என்பது சமூகத்தின் உயிரணு என்றும் எடுத்துரைத்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 July 2023, 13:52