தேடுதல்

கர்தினால் மைக்கல் செர்னி கர்தினால் மைக்கல் செர்னி 

படைப்பை பாதுகாக்க அடிப்படையான உடனடி நடவடிக்கைகள் தேவை

கர்தினால் செர்னி : இந்த நூற்றாண்டின் மத்தியிலேயே சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் நச்சுக் காற்று சுற்றுச்சூழலில் வெளியிடப்படுவது முற்றிலுமாக நிறுத்தப்படும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

நம் பொது இல்லமாகிய படைப்பை பாதுகாக்க அடிப்படையான உடனடி நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன என சுற்றுச்சூழல் குறித்து லிஸ்பனில் நடைபெறும் நான்காவது உலக கருத்தரங்கில் உரையாற்றினார் கர்தினால் மைக்கல் செர்னி.

போர்த்துக்கல்லின் லிஸ்பனில்,  ‘ஒன்றிணைந்த சுற்றுச்சூழல் குறித்த இளையோரின் அர்ப்பணம், புதிய மனிதகுலத்திற்கான வாழ்க்கைமுறை’ என்ற தலைப்பில் இடம்பெறும் கருத்தரங்கில் ஜூலை 31, திங்களன்று காலை உரையாற்றிய, ஒருங்கிணைந்த மனிதகுல வளர்ச்சிக்கான திருப்பீடத்துறையின் தலைவர் கர்தினால் செர்னி அவர்கள், மனிதர்கள் சார்பாக, குறிப்பாக பலவீனமான மக்கள் சார்பாக செயல்படவேண்டிய ஒருங்கிணைந்த சுற்றுச்சூழலின் இறையியல் அர்த்தம் என்ற தலைப்பில் தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

சுற்றுச்சூழல் பாதிப்பு, கலாச்சார மோதல்கள், பல இலட்சக்கணக்கான அகதிகளின் இருப்பு, என பல்வேறு நெருக்கடிகளை இன்றைய உலகம் எதிர்நோக்கி வருகிறது என்பதை சுட்டிக்காட்டிய கர்தினால் செர்னி அவர்கள், ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத்தின் கூறுகள் குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் Laudato si' ஏட்டில் குறிப்பிட்டுள்ளதையும் எடுத்தியம்பினார்.

புதிய தலைமுறையின் பங்களிப்பு, அனைவரின் முன்னேற்றதிற்கும் உறுதி வழங்கும் ஒரு புதிய பொருளாதார அமைப்புமுறை, போன்றவைகள் பற்றியும் உரையாற்றிய கர்தினால் செர்னி அவர்கள், இந்த நூற்றாண்டின் மத்தியிலேயே சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் நச்சுக் காற்று சுற்றுச்சூழலில் வெளியிடப்படுவது முற்றிலுமாக நிறுத்தப்படும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார்.

சுற்றுச்சூழல் அக்கறையின்றி வளமான வருங்காலத்தை அமைக்க முடியாது என்பதை உணர்ந்துள்ள மனித குலம், நம் ஒவ்வொருவரின் அர்ப்பணத்திற்கும் அழைப்புவிடுக்கிறது எனவும் கூறினார் கர்தினால்.

காடுகள் ஒழிப்பை தடுத்தல், கடலின் கரைகள் அரித்துச் செல்லப்படுவதை தடுத்தல், சுற்றுச்சூழலை பாதுகாத்தல், பொருளாதாரமும் நிதித்துறையும் இலாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட நிலையிலிருந்து விலகி நிற்றல், போன்ற பல்வேறு பரிந்துரைகளையும் வருங்கால சமுதாயத்தின் நன்மைக்கென முன்வைத்தார் கர்தினால் செர்னி.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 July 2023, 14:17