தேடுதல்

பேராயர் பால் ரிச்சர்டு காலகர். பேராயர் பால் ரிச்சர்டு காலகர்.  (AFP or licensors)

அமைதிக்கான இறைவாக்குத்தன்மையின் வெளிப்பாடு

திருஅவை அரசியலின் மொழியைப் பயன்படுத்தக்கூடாது, மாறாக இயேசுவின் மொழியைப் பயன்படுத்த வேண்டும்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

திருத்தந்தையின் உக்ரைன் மக்களுக்கான செயல்பாடுகள் மற்றும் வார்த்தைகள் வெறும் அமைதிக்கான சொல்லாட்சியின் வெளிப்பாடுகள் அல்ல என்றும், ஒரு வலுவான மற்றும் நிலையான அமைதிக்கான இறைவாக்குத்தன்மையின் வெளிப்பாடு என்றும் எடுத்துரைத்தார் பேராயர் காலகர்.

ஜூலை 13 வியாழன் அன்று உரோமையில் நடைபெற்ற லைம்ஸ் பத்திரிக்கையின் "உக்ரேனிய பாடங்கள்‘‘ (Lezioni ucraine) என்ற புத்தக விளக்கக் கூட்டத்தின் போது இவ்வாறு கூறினார் பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர்.

திருஅவை அரசியலின் மொழியைப் பயன்படுத்தக்கூடாது, மாறாக இயேசுவின் மொழியைப் பயன்படுத்த வேண்டும் என்ற கொள்கையை உடையவர் திருத்தந்தை பிரான்சிஸ் என்றும், இந்த கொள்கையால் ஈர்க்கப்பட்ட உரையாடலையும் அமைதியையும் சாத்தியமாக்குவதற்கான அதிக விருப்பத்தைக் கொண்டவர் என்றும் எடுத்துரைத்தார் பேராயர் காலகர்.

உக்ரேனிய மக்களுக்கு ஆதரவாக செய்யப்பட்ட அனைத்து மனிதாபிமான முன்முயற்சிகள் மற்றும் செயல்கள் வழியாக ஆக்கிரமிப்பாளர் யார் மற்றும் பாதிக்கப்பட்டவர் யார் என்பதை திருத்தந்தை ஒரு உறுதியான மட்டத்தில் தெளிவாக நிரூபித்துள்ளார் என்று கூறிய பேராயர் காலகர் அவர்கள், போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உறுதியான கிறிஸ்தவ நெருக்கத்தைக் காட்டுவதுதான் திருத்தந்தையின் விருப்பம் என்பதைத்  தலத்திருஅவைப் பிரதிநிதிகளின் செயல்பாடுகள் தெளிவாக எடுத்துரைக்கின்றன என்றும் கூறினார்.

தங்களது ஆக்கமுள்ள செயல்களை மக்களுக்காகவும் நாட்டின் அமைதிக்காக செலவழிக்க தலத்திருஅவை பிரதிநிதிகள் அனைவரும் முயற்சிப்பதாகவும் எடுத்துரைத்த பேராயர் காலகர் அவர்கள், உள்ளூர் கத்தோலிக்கத் தலத்திருஅவை, இலத்தீன் மற்றும் கிழக்கு வழிபாட்டுமுறை தலத்திருஅவைகள், பல்வேறு கத்தோலிக்க தொண்டு நிறுவனங்கள், ஆகிய அனைத்தும் மனிதாபிமான துறையில், உக்ரைனில் எண்ணற்ற பணிகளை மேற்கொண்டு வருவதையும் நினைவுகூர்ந்தார்.

கர்தினால் கோன்ராட் கிராவெஸ்கி அவர்களின் பணியினை  பிறரன்புப் பணிகளுக்கான அரவணைப்பு என்று எடுத்துக்கூறிய பேராயர் காலகர் அவர்கள், உக்ரேனிய மக்கள் அனுபவிக்கும் துன்பம் மற்றும் சோகத்தில் அவர்களைத் தனியாக விட்டுவிடாது கர்தினால் கிராவெஸ்கி அவர்கள் வழியாக அம்மக்களை அரவணைத்துக் காக்கும் திருத்தந்தையின் செயல்களையும் சுட்டிக்காட்டினார்.

ஒருவரின் மனதையும் இதயத்தையும் மற்றவருக்குத் திறக்கும் தேவை இக்காலத்தில் அதிகமாக உள்ளது என்று வலியுறுத்திய பேராயர் காலகர் அவர்கள் ஒருவர் இன்னொருவர் மீதான அவநம்பிக்கையை நியாயப்படுத்தும் போக்கை தவிர்த்து உள்ளார்ந்த நம்பிக்கையை வளர்ப்பதில் இன்னும் அதிக அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 July 2023, 13:54