தேடுதல்

பேராயர் பால் ரிச்சர்டு காலகர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர்  

மங்கோலிய உயர் அதிகாரிகளைச் சந்தித்த பேராயர் காலகர்

பன்னாட்டு சமூகத்துடன் வத்திக்கான் மற்றும் மங்கோலியா இணைந்து, பாலைவனமாக்கல், காலநிலை மாற்றம், மண் சீரழிவு போன்ற சவால்களை சமாளிக்க இணைந்து செயல்படும் என்று இருவரும் மீண்டும் உறுதிபடுத்தியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மெரினா ராஜ் – வத்திக்கான்

வளர்ச்சிக்கான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் கவனம், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சவால்களை சமாளித்தல், ஒன்றிணைந்து செயல்படுதல் ஆகியவற்றிற்கான உறுதியை பேராயர் காலகர் மற்றும் மங்கோலிய உயர் அதிகாரிகள் உடனான  சந்திப்பு வெளிப்படுத்தியதாக AKI என்னும் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது

ஜூன் 4 ஞாயிற்றுக்கிழமை முதல் 6 செவ்வாய்க்கிழமை வரை கிழக்கு ஆசிய நாடான மங்கோலியாவிற்கு பயணம் மேற்கொண்ட பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்கள், மங்கோலியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் Battsetseg Batmunk அவர்களைச் சந்தித்து உரையாடினார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மங்கோலிய தலத்திருஅவையுடனான திருப்பீடத்தின் செயல்பாடுகள், உறவுகள், அதன் உள்ளடக்கத்தை வளப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றியக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட பேராயர் காலகர் அவர்கள், வரலாறு, கலாச்சாரம் நலவாழ்வு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு மற்றும் பிரச்சனைகள் பற்றியும் வெளியுறவுத்துறை அமைச்சருடன் கலந்துரையாடியதாக அச்செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது .

மங்கோலியாவின் நீண்டகால வளர்ச்சிக் கொள்கையான "எதிர்நோக்கு 2050", நடுத்தர கால புதிய மறுமலர்ச்சிக் கொள்கை ஆகியவற்றின் இலக்குகளை Batmunk முன்வைத்தார் என்றும், பன்னாட்டு சமூகத்துடன் இணைந்து பாலைவனமாக்கல், காலநிலை மாற்றம், மண் சீரழிவு போன்ற சவால்களை சமாளிக்க வத்திக்கான் மற்றும் மங்கோலியா இணைந்து செயல்படும் என்று இருவரும் மீண்டும் உறுதிபடுத்தியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

1992ஆம் ஆண்டு வத்திக்கான் மங்கோலியா இரு நாடுகளுக்கும் இடையே திருப்பீட உறவுகள் ஏற்படுத்தப்பட்ட பின்னர், உயர்மட்ட வத்திக்கான் அதிகாரியின் முதல் பயணம் பேராயர் காலகரின் வருகையாகும் என்றும்,  கடந்த ஆண்டு மங்கோலியாவிற்கும் வத்திக்கானுக்கும் இடையிலான திருப்பீட உறவுகளின் 30வது ஆண்டு நிறைவுக் கொண்டாடப்பட்டது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தனது பயணத்தின் இறுதி நாளில் மங்கோலிய அரசுத்தலைவர் Ukhnaagiin Khürelsükhஐ சந்தித்து உரையாடிய பேராயர் காலகர் அவர்கள், செங்கிஸ்கான் தேசிய அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 June 2023, 13:51