உலகில் அமைதி வாழ்வை ஊக்குவிப்பவர்களுக்கு விருது
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
2024ஆம் ஆண்டிற்கான Zayed மனித உடன்பிறந்த நிலை விருதிற்கு தகுதியானவர்களின் பெயர் பரிந்துரைகள் இம்மாதம், அதாவது ஜூன் மாதம் முதல் தேதி முதல் வரவேற்கப்படுகின்றன.
மத்தியகிழக்கு வளைகுடாவின் அபுதாபியில் 2019ஆம் ஆண்டு பிப்ரவரி நான்காம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கும் இஸ்லாமிய தலைமைக்குரு Ahmed Al-Tayeb அவர்களுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட மனித உடன்பிறந்த நிலை குறித்த பரிந்துரை ஒப்பந்தத்தை கௌரவிக்கும் விதமாக 2019ல் உருவாக்கப்பட்ட இந்த விருது ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 4ஆம் தேதி வழங்கப்படுகிறது.
உலகில் ஒருமைப்பாடு, ஒன்றிணைந்த வாழ்வு, நீதியான வாழ்வு, நல்நோக்கங்கள், மக்களிடையே அமைதியை ஊக்குவித்தல் போன்றவைகளுக்கு சோர்வின்றி, சுயநலமின்றி உழைத்தவர்களுக்கு வழங்கப்படும் இந்த விருது 10 இலட்சம் டாலர்கள் ரொக்கப் பரிசை உள்ளடக்கியது.
இவ்விருதுக்குத் தகுதியான தனிநபர்கள், மற்றும் அமைப்புக்களின் பெயர்களை பரிந்துரைக்க விரும்புபவர்கள், ஜூன் ஒன்றாம் தேதி முதல் அக்டோபர் முதல்தேதி வரை தங்கள் பரிந்துரைகளை அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமுதாயத்தின் அனைத்து நிலைகளிலும் மனித உடன்பிறந்த நிலையை உக்குவிக்க உழைக்கும் தகுதியானவர்களின் பெயர்கள், zayedaward.org என்ற வலைத்தளத்தின் வழி 2004ஆம் ஆண்டு விருதுக்கென பரிந்துரைக்கப்படலாம் என அறிவித்தார், இந்த விருது நிறுவனத்தின் பொதுச்செயலர், நீதியரசர் Mohamed Abdelsalam.
பரிந்துரைக்கப்படும் பெயர்களிலிருந்து தனி சுதந்திரம் பெற்ற வல்லுனர்கள் குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு, மனித உடன்பிறந்த நிலைக்கான உலக நாள் என ஐ.நா. நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட, அதாவது திருத்தந்தைக்கும் இஸ்லாமிய தலைமைக் குருவுக்கும் மனித உடன்பிறந்த நிலை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட பிப்ரவரி 4 ஆம் தேதி இவ்விருது வழங்கப்படும்.
இதன் கௌரவ விருதைப் பெறுபவர்களாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இஸ்லாமிய தலைமைக்குரு Ahmed Al-Tayeb அவர்களும் துவக்கத்திலேயே அறிவிக்கப்பட்டுள்ளவேளை, ஐ.நா. பொதுச்செயலர் அந்தோனியோ குட்டாரெஸ், தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையாளர் Latifa Ibn Ziaten, ஜோர்டான் மன்னர் மற்றும் அவரின் மனவி, ஹெயிட்டியின் மனிதாபிமான அமைப்பு FOKAL, Sant’Egidio கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு, கென்ய அமைதி நடவடிக்கையாளர் Shamsa Abubakar Fadhil ஆகியோருக்கு இவ்விருது இதுவரை வழங்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்