தேடுதல்

கர்தினால்  Krajewski கர்தினால் Krajewski 

துன்புறும் உக்ரைன் மக்களுக்கு திருத்தந்தையின் உதவி

ககோவ்கா நீர்மின் அணை அழிக்கப்பட்டு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் 80 க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன

மெரினா ராஜ் – வத்திக்கான்

ஒரு தந்தை தன் குழந்தைகளைக் காப்பது போல திருத்தந்தை, துன்புறும் உக்ரைன் மக்களைக் காக்கின்றார் என்றும், ஒன்றிணைத்தல், பகிர்தல், திருத்தந்தையின் உடனிருப்பை வெளிப்படுத்துதல் ஆகியவை தன் பயணத்தின் அடையாளமாக இருக்கும் என்றும் தெரிவித்தார் கர்தினால் Konrad Krajewski

போரினால் பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனிற்கு உணவு மற்றும் மருந்துப்பொருள்களுடன் ஆறாவது முறையாக பயணம் செய்வதாக தெரிவித்துள்ளார் திருத்தந்தையின் பிறரன்புப் பணிகளுக்குப் பொறுப்பான  கர்தினால் Konrad Krajewski.

உக்ரைனின் நோவா ககோவ்கா அணை அழிக்கப்பட்ட பின்னர், மக்கள் கெர்சனில் மனிதாபிமானமற்ற முறையில் மிகவும் துன்புறுகின்றார்கள் என்றும், அத்தகைய மக்களுக்கு திருத்தந்தையின் உடனிருப்பை வெளிப்படுத்துவதற்காக உக்ரைன் செல்வதாகவும் தெரிவித்தார் கர்தினால் Konrad Krajewski

100,000க்கும் மேற்பட்ட உறையவைக்கப்பட்ட உணவுகள், மருந்துகள் மற்றும் சுகாதார உதவிகளையும் திருத்தந்தையின் பெயரால் உக்ரைனுக்கு கொண்டு செல்வதாகவும், இப்பயணத்தில் திருத்தந்தையின் வார்த்தைகளுக்கிணங்க, பல்வேறு மதத் தலைவர்கள், சமூகங்கள், கிரேக்க-கத்தோலிக்க, ஆர்த்தடாக்ஸ் மற்றும் கத்தோலிக்க தலத்திருஅவைகளையும் பார்வையிடுவார் கர்தினால் Krajewski.

ககோவ்கா நீர்மின் அணை அழிக்கப்பட்டு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் 80க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன என்றும், 20,000 ஹெக்டேர் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு, 150 டன்களுக்கும் அதிகமான எண்ணெய் நிலத்தில் சிந்தப்பட்டு பாதிப்படைந்துள்ளது என்றும் கூறியுள்ளார் கர்தினால் Krajewski.

மக்கள் மனிதாபிமானமற்ற முறையில் நீர், உணவு, தங்குமிடம் இன்றி துன்பப்படுகிறார்கள் என்று கூறியுள்ள கர்தினால் கிராஜேவ்ஸ்கி, மிக அவசரமான மருந்துகளை வாகனத்திலும், கொரியாவில் இருந்து பெறப்பட்ட உணவுப் பொருட்களை கனரக வாகனத்திலும் கொண்டு செல்வதாகத் தெரிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 June 2023, 13:09