குடியேற்றதாரரை நாட்டிற்குள் ஒன்றிணைக்க முயலவேண்டும்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
புலம்பெயர்வோரை பாதுகாக்க பன்னாட்டு அளவில் பல முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகின்றபோதிலும், அடைக்கலம் தேடிவருவோர் வழியிலேயே, குறிப்பாக கடலில் உயிரிழப்பது மிகவும் வேதனை தருவதாக உள்ளது என ஐ.நா. மனித உரிமைகள் அவைக் கூட்டத்தில் திருப்பீடத்தின் சார்பில் உரையாற்றினார் பேரருள்திரு John Putzer.
சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவிலுள்ள ஐ.நா. அலுவலகம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் திருப்பீடப் பிரதிநிதியாகச் செயல்படும் பேரருள்திரு Putzer அவர்கள், மனித உரிமைகள் அவையின் 53வது வழக்கமான அவைக் கூட்டத்தில் குடியேற்றதாரரின் மனித உரிமைகள் குறித்து வழங்கிய உரையில், இம்மக்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் துன்பங்கள் குறித்து திருப்பீடத்தின் ஆழ்ந்த கவலையை வெளியிட்டார்.
குடிபெயர விரும்பும் மக்களுக்கு பாதுகாப்பான வழிகள் இல்லாத நிலையில், அவர்கள் ஏமாற்றப்படுவது, மனிதக் குற்றக்கும்பல்களின் வலையில் வீழ்வது, உயிரை இழப்பது போன்றவை நிகழ்கின்றன என்பதையும் சுட்டிக்காட்டினார் திருப்பீடப் பிரதிநிதி.
புது நாட்டுக்குள் அடைக்கலம் தேடி நுழையும் புலம் பெயர்ந்தோர் சுரண்டப்படாமல், உரிமை மீறலுக்கு உள்ளாக்கப்படாமல் இருக்க வேண்டுமெனில், அரசுகளும் அப்பகுதி சமூகங்களும் இன்முகத்துடன் வரவேற்று அவர்களுக்கு பாதுகாப்பு உறுதியளித்து, எவ்வித பாகுபாடுமின்றி அவர்களை நாட்டிற்குள் ஒன்றிணைக்க முயலவேண்டும் எனவும் விண்ணப்பித்தார் திருப்பீடப் பிரதிநிதி பேரருள்திரு Putzer.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்