தேடுதல்

ஐ.நா.வில் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றும் பேராயர்  கபிரியேலே காச்சா ஐ.நா.வில் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றும் பேராயர் கபிரியேலே காச்சா 

வன்முறைகளினால் பாதிக்கப்படும் மக்கள்

இரு நாடுகளின் தீர்வை அதன் அனைத்து அம்சங்களிலும் செயல்படுத்துவதற்காக, இஸ்ரேல் அரசும், பாலஸ்தீன அரசும் நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதன் வழியாக மட்டுமே துணிவையும் உறுதியையும் மீட்டெடுக்க முடியும்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் முழுவதும் அதிகரித்துள்ள வன்முறை அப்பாவி மக்களை பாதித்துள்ளது என்றும், கிழக்கு பாலஸ்தீன் குடிபெயர்ந்தோர்க்கான ஐக்கிய நாடுகளின் தீர்வுப் பணிகளுக்கு திருஅவை தனது ஆதரவை அளிக்கின்றது என்றும் கூறினார் பேராயர் கபிரியேலே காச்சா.

ஜூன் 2 வெள்ளிக்கிழமை நியுயார்க்கில் நடைபெற்ற கிழக்கு பாலஸ்தீன் குடிபெயர்ந்தோர்க்கான தீர்வு மற்றும் பணிக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய போது இவ்வாறு கூறினார் ஐ.நா.வில் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றும் பேராயர்  கபிரியேலே காச்சா.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மரணச் சூழல், இரண்டு மக்களிடையே இருக்கும் நம்பிக்கையின் கதவுகளை மூடுகின்றன என்ற திருத்தந்தையின் வரிகளை மேற்கோள்காட்டிய பேராயர் காச்சா அவர்கள், இத்தகைய வன்முறையானது, நம்பிக்கையுள்ள மக்களை அச்சத்திற்கு உட்படுத்தியுள்ளது என்றும், அமைதிப் பாதைக்குத் திரும்புவதன் வழியாகவே அனைவரின் மாண்பும் உரிமையும் முழுமையாக நிலைநாட்டப்படுவதை உறுதி செய்ய முடியும் என்றும் வலியுறுத்தினார்.

சமூக, பொருளாதார மற்றும் மனிதாபிமான நிலைமைகளின் பாதிப்பு காரணமாக அதிகரித்து வரும் தேவைகள் மற்றும் செலவினங்கள், இவ்வியக்கங்களின் (UNRWA) வழக்கமான வரவு செலவுத் திட்டம் மற்றும் தன்னார்வ பங்களிப்புகளைத் தேக்க நிலையில் வைத்துள்ளன என்றும் எடுத்துரைத்த பேராயர் காச்சா அவ்ர்கள், இத்தகைய தேக்கம், பாலஸ்தீன குடிபெயர்ந்தோரின் நல்வாழ்வு, மனித மேம்பாடு,  பாதுகாப்பு மற்றும் அவல நிலையை சரிசெய்வதற்கான அனைத்து முக்கிய பணிகளையும் ஆற்ற முடியாமல் தடுக்கின்றது என்றும் எடுத்துரைத்துள்ளார்.

தேவைப்படுபவர்களுக்கு அத்தியாவசிய உதவிகள் குறைக்கப்படும் ஆபத்து உள்ளது என்று எடுத்துரைத்த பேராயர் காச்சா அவர்கள், இது வறுமையை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், சிலர் வன்முறையில் ஈடுபடுவதற்கான விரக்தியின் உணர்வுகளையும் தூண்டுவதற்கு வாய்ப்பாக அமையும் என்றும் எடுத்துரைத்துள்ளார்.

இரு நாடுகளின் தீர்வை அதன் அனைத்து அம்சங்களிலும் செயல்படுத்துவதற்காக, இஸ்ரேல் அரசும், பாலஸ்தீன அரசும் நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதன் வழியாக மட்டுமே துணிவையும் உறுதியையும் மீட்டெடுக்க முடியும் என்றும் தெரிவித்தார் பேராயர் காச்சா.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 June 2023, 13:27