தேடுதல்

வத்திக்கான் நகருக்கான திருத்தந்தையின் நிர்வாகப் பிரதிநிதி கர்தினால் மவ்ரோ கம்பெத்தி. வத்திக்கான் நகருக்கான திருத்தந்தையின் நிர்வாகப் பிரதிநிதி கர்தினால் மவ்ரோ கம்பெத்தி.  

திணிக்கப்படுவதால் அல்ல தாழ்த்திக்கொள்வதால் வெளிப்படும் அன்பு

விண்ணகத்திலிருந்து இறங்கிய உணவாக இயேசுவின் உடலை நற்கருணையில் பகிர்ந்து கொள்வதன் வழியாக நாம் அனைவரும் சகோதரர்களாகின்றோம்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

திணிக்கப்படுவதால் அல்ல மாறாக தன்னைத் தானேத் தாழ்த்திக் கொள்வதால் அன்பு வெளிப்படுத்தப்படுகின்றது என்றும், இயேசுவின் திருஉடலை நற்கருணையில் பகிர்ந்து கொள்வதன் வழியாக நாம் அனைவரும் சகோதரர்களாகின்றோம் என்றும் கூறினார்  கர்தினால் மவ்ரோ கம்பெத்தி.

ஜூன் 8, வியாழனன்று உரோம் வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவிலில் சிறப்பபிக்கப்பட்ட இயேசுவின் திருஉடல் திருஇரத்த பெருவிழா திருப்பலி மறையுரையின் போது இவ்வாறு கூறினார் வத்திக்கான் நகருக்கான திருத்தந்தையின் நிர்வாகப் பிரதிநிதி கர்தினால் மவ்ரோ கம்பெத்தி.

அன்பும் வாழ்க்கையும் திணிக்கப்படுவதன் வழியாக அல்ல மாறாகத் தன்னைத் தாழ்த்திக்கொள்வதன் வழியாகவே வெளிப்படுத்தப்படுகின்றன என்று கூறிய கர்தினால் கம்பெத்தி அவர்கள், கிறிஸ்தவர்களாகிய நமக்கு இதைவிட விலைமதிப்பற்ற கொடை வேறு எதுவும் இல்லை என்றும், கிறிஸ்து சிலுவையில் உயர்த்தப்பட்டது அவரது தாழ்ச்சியின் அடையாளம் என்றும் கூறினார். 

திருப்பலியின் போது
திருப்பலியின் போது

சனிக்கிழமையன்று நடைபெறும் மனித உடன்பிறந்த உறவு பற்றிய உலகக் கூட்டத்தின் முழக்க வரிகளான, ‘‘எழு, உண்,  நட!... வழிப்போக்கர்களாகிய நம் பயணம் நீண்டது, நாம் தனியாக இல்லை“ என்பதை வலியுறுத்திய கர்தினால் கம்பெத்தி அவர்கள், விண்ணகத்திலிருந்து இறங்கிய உணவாக அவரது உடலை நற்கருணையில் பகிர்ந்து கொள்வதன் வழியாக நாம் அனைவரும் சகோதரர்கள் என்பதையும் வலியுத்தினார்.

உண்மையான முழு வாழ்வு நமக்கு வேண்டும் எனில், இயேசுவின் அழைப்பிற்கு செவிசாய்க்கவேண்டும் என்று வலியுறுத்திய கர்தினால் கம்பெத்தி அவர்கள், சனிக்கிழமை நடைபெறும் உலக மனித உடன்பிறந்த உறவுக்கானக் கூட்டத்திற்கும் திருத்தந்தையின் உடல் நலனுக்காகவும் செபிக்க அழைப்பு விடுத்தார்.

கிறிஸ்துவின் உடலையும் இரத்தத்தையும் உண்பது என்பது முழு ஒற்றுமையை ஏற்படுத்துவதாகும், மனிதத்தன்மையில் மூழ்கியிருக்கும் அவரது தெய்வீகத்தை அங்கீகரிப்பதாகும் என்று வலியுறுத்திய கர்தினால் கம்பெத்தி அவர்கள், அன்பு வாழ்க்கையை விரும்பும் நாம் நம்மைத் தாழ்த்திக் கொள்ள முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அன்பிற்காகத் தன்னையேத் தாழ்த்தி உயர்ந்த இயேசு போல நம்மைத் தாழ்த்த வேண்டும் என்று வலியுறுத்திய கர்தினால் கம்பெத்தி அவர்கள், உலக அடிப்படையில் சிந்திக்காமல், இயேசுவின் தாழ்ச்சியான பிரசன்னம், மனித உடன்பிறந்த உறவு செயல்பாடுகள், அமைதி, நினைவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் வாழ வலியுறுத்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 June 2023, 13:58