அமைதிக்கான பணிகளை மதிப்பிடுவது பலனளிக்கும் கர்தினால் Zuppi.
மெரினா ராஜ் - வத்திக்கான்
பேச்சுவார்த்தைகளின் முடிவுகள், உக்ரேனிய மக்களின் கொடூரமான துன்பங்களின் நேரடி அனுபவம் ஆகியவை திருத்தந்தையின் கவனத்திற்கு கொண்டு வரப்படும் என்றும், அமைதிக்கான பணிகளை மதிப்பிடுவது நிச்சயமாக பயனுள்ளதாக இருக்கும் என்றும் தெரிவித்தார் கர்தினால் Matteo Zuppi.
ஜூன் 5 திங்கள் கிழமை முதல் 6 செவ்வாய்க்கிழமை வரை திருத்தந்தையின் தூதுவராக உக்ரைன் சென்ற இத்தாலிய ஆயர் பேரவைத் தலைவரும், Bologna நகர் பேராயருமான கர்தினால் Zuppi அவர்களது பயணம் பற்றி திருப்பீட செய்தித் தொடர்பகத்தின் அறிக்கை இவ்வாறு தெரிவிக்கின்றது.
கடந்த பதினைந்து மாதங்களாக உக்ரைனில் நடந்து வரும் போரினால் ஏற்பட்ட சோகத்தின் பல்வேறு நிலைகளை தவிர்க்க கூட்டங்களும் செபங்களும் தொடர்ந்து நடைபெறும் நிலையில், நிலையான அமைதிக்காக உக்ரைன் அரசுத்தலைவர் விளாடிமீர் செலன்ஸ்கியுடனான சந்திப்பை கீவில் உள்ள சோபியா பேராலயத்தில் நடைபெற்ற சிறிய செப வழிபாட்டுடன் தொடங்கினார் கர்தினால் Zuppi.
அரசுத்தலைவர் செலென்ஸ்கியுடன் உரையாடல் மேற்கொண்ட கர்தினால் Zuppi அவர்கள், இரஷ்யர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள உக்ரேனிய சிறார், பொதுமக்கள் மற்றும் சிறைக்கைதிகள் அனைவரின் பிரச்சனை மற்றும் தற்போதைய நிலைமை குறித்து மனித உரிமைகளுக்கான உக்ரேனிய நாடாளுமன்ற ஆணையர் Dmytro Lubinets அவர்களுடனும் உரையாடினார்.
நிலையான அமைதியை அடைவதற்கான நோக்கத்துடன் அரசுத்தலைவரைச் சந்தித்த கர்தினால் Zuppi அவர்கள், போர்ப் பதட்டங்களைத் தணிக்கவும் மனிதகுலத்தின் செயல்களை ஆதரிக்கவும், நிறுவன அதிகாரிகள் மற்றும் சமயத்தலைவர்களை வலியுறுத்தினார்.
மேலும், உக்ரைனின் Buchaவில் நடந்த இக்கூட்டத்தின் அமைதிக்கான சிறிய செபவழிபாட்டில், போரினால் உயிரிழந்தவர்கள், தெருக்களிலும் புதைகுழிகளிலும் ஆதரவின்றி மடிந்தவர்கள் என அனைவரின் ஆன்ம இளைப்பாற்றிக்காகவும் செபிக்கப்பட்டது.
ஒரு நியாயமான மற்றும் நீடித்த அமைதிக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், கூட்டம் நல்ல முறையில் நடைபெற உதவிய அரசுத்தலைவர் மற்றும் அரசு அதிகாரிகளுக்குத் தன் நன்றியினையும் தெரிவித்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்