தேடுதல்

காங்கோவில் இறைமக்களுடன் Luis Antonio Tagle காங்கோவில் இறைமக்களுடன் Luis Antonio Tagle  

திருத்தந்தையின் வார்த்தைகள் காங்கோவிற்கு நம்பிக்கையளித்துள்ளது

காங்கோ மற்றும் ஆப்பிரிக்காவிலுள்ள தலத்திருஅவைகள் அனைத்தும் இளமையாகவும் மிகவும் துடிப்பு மிக்கதாகவும் இருக்கின்றன: கர்தினால் Luis Antonio Tagle

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

காங்கோ மக்களிடமிருந்தும் காங்கோ கத்தோலிக்கர்களிடமிருந்தும் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய படிப்பினைகள் நிறைய இருக்கின்றன என்றும், நம்பிக்கையின் மகிழ்ச்சியை அவர்களிடத்தில் தான் கண்டதாகவும் கூறியுள்ளார் கர்தினால் Luis Antonio Tagle

காங்கோ ஜனநாயகக் குடியரசின் இரண்டாவது பெருநகரமான Lubumbashi-இல் நடைபெற்ற மூன்றாவது தேசிய நற்கருணை மாநாட்டிற்குத் திருத்தந்தையின் சிறப்புத் தூதராகச் சென்ற தனது பயணம் பற்றி வத்திக்கான் செய்திகளுக்கு வழங்கிய நேர்காணலில் இவ்வாறு தெரிவித்துள்ளார் கர்தினால் Tagle.

பிலிப்பீன்ஸ் கர்தினாலும் நற்செய்தி அறிவிப்புத் திருப்பீடத் துறையின் தலைவருமான கர்தினால் Tagle அவர்கள், காங்கோ கிறிஸ்தவர்களின் சாட்சிய வாழ்வு, இறைநம்பிக்கையின் வலிமை மற்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடனான அம்மக்களின் சிறப்புப் பந்தம் ஆகியவற்றைக் குறித்து விரிவாகப் பேசியுள்ளார்.

காங்கோ மக்கள் மற்றும் காங்கோ தலத்திருஅவையில் உங்களை மிகவும் கவர்ந்தது எது? என்ற கேள்விக்குப் பதிலளித்த கர்தினால் Tagle அவர்கள், அம்மக்களிடமிருந்து நம்பிக்கையின் மகிழ்ச்சியைத் தான் கண்டதாகவும், அவர்கள் இறைவன் மீது கொண்டுள்ள விசுவாசமும் நம்பிக்கையுமே உண்மையான நற்கருணை என்பதைத் தனக்கு உணர்த்தியாகவும் எடுத்துரைத்துள்ளார்.

அண்மையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்ட திருத்தூதுப் பயணம் அம்மக்களிடம் எம்மாதிரியான கனிகளை விளைவித்திருக்கிறது என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த கர்தினால் Tagle அவர்கள், சமூகப் பணியாளர்கள் உட்பட அந்நாட்டு மக்கள் பலருக்கும் திருத்தந்தையின் வார்த்தைகள் அவர்களின் நம்பிக்கைக்கு ஊற்றாக அமைந்ததாகவும், நன்றாகப் படித்தால் நல்லிணக்கம் மற்றும் அமைதிக்கான பாதையை வழங்க முடியும் என்றும் அவர்கள் கூறியதாகவும் விவரித்துள்ளார்.

வன்முறை மற்றும் போரால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியான  வடக்கு கிவுவின் தலைநகரான கோமாவின் தற்போதைய நிலை குறித்து கேட்டபோது,  மற்ற புலம்பெயர்ந்தோர் முகாமில் உள்ளதைப் போலவே இங்கும் மக்கள் மிகவும் மோசமான மற்றும் நிர்க்கதியான சூழ்நிலையில் உள்ளனர். ஆனால், அமைதிக்காக ஏங்கும் ஆசைகொண்ட மனங்களை அதிகம் அவர்களிடத்தில் காண முடிந்தது என்றும், இவர்களின் துயரங்களை மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்து மக்களும், அந்நாட்டு அரசு மற்றும் அனைத்துலக சமூகமும் உற்றுநோக்கும் என்று தான் நம்புவதாகவும் கூறியுள்ளார் கர்தினால் Tagle

ஒன்றிணைந்த பயணம் என்ற தலைப்பில் நிகழவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றத்திற்கான காங்கோ அல்லது மற்ற ஆப்பிரிக்கத் தலத்திருஅவைகளின் பங்களிப்பாக நீங்கள் எவற்றைப் பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்குப் பதிலளித்த கர்தினால் Tagle அவர்கள், காங்கோ மற்றும் ஆப்பிரிக்காவின் தலத்திருஅவைகள் அனைத்தும் இளமையாகவும் மிகவும் துடிப்பு மிக்கதாகவும் இருக்கின்றன என்றும்,  அவர்களிடம் அதிகம் இளைஞர்கள் உள்ளனர், அவர்கள் இறைவேண்டல் செய்கின்றனர், பாடுகின்றனர், இறைநம்பிக்கையில் தங்களை முழுதும் நகர்த்துகின்றனர். இதுவே இவ்வுலக ஆயர்கள் மாமன்றத்திற்கும் ஒட்டுமொத்த திருஅவைக்கும் வலிமை சேர்க்கும் என்று தான் உறுதியாக நம்புவதாகவும் கூறியுள்ளார் 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 June 2023, 14:00