தேடுதல்

திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்  

கடவுளின் அன்பு வலிமையானது - கர்தினால் பரோலின்

என் பணி அன்பு செய்வதே என்பதை தனது வாழ்வில் வெளிப்படுத்திய குழந்தை இயேசுவின் தெரசா, குடும்பம் முதல் கார்மேல் இல்லம் வரை எல்லா இடங்களிலும், இயேசுவை ஆழமாக அன்பு செய்தார்

மெரினா ராஜ் – வத்திக்கான்

கடவுளின் அன்பு மரணத்தை விட வலிமையானது என்றும் நம்முடைய பாவங்களை விட கடவுளின் விசுவாசம் வலிமையானது என்றும் கூறினார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின்.

ஜூன் 7, புதன்கிழமை மாலை உரோமில் உள்ள புனித Louis-des-Français ஆலயத்தில் குழந்தை இயேசுவின் புனித தெரசா நினைவுச்சின்னங்கள் மற்றும் அவரது பெற்றோர்களான அருளாளர்கள் லூயிஸ் மற்றும் ஜெலி ஆகியோரின் நினைவுச்சின்னங்கள் முன்னிலையில் நடைபெற்ற திருப்பலியில் பங்கேற்றபோது இவ்வாறு கூறினார் கர்தினால் பரோலின்.

இயேசுவை ஆழமாக அன்பு செய்து அவரை வாழ்வின் ஒரே துணையாக ஆக்குவதன் வழியாக, அவருடைய வாழ்நாள், எண்ணங்கள், செயல்கள், கவனம் அனைத்தையும் இயேசுவுக்காக அர்ப்பணித்தவர் புனித குழந்தை இயேசுவின் தெரசா என்றும், எல்லாவற்றையும் தியாகம் செய்த அவர், விண்ணுலகில் வானதூதரைப் போலவும், இயேசுவின் மணவாட்டி போலவும் திகழ்கின்றார் என்றும் கூறினார்.

என் பணி அன்பு செய்வதே என்பதை தனது வாழ்வில் வெளிப்படுத்திய குழந்தை இயேசுவின் தெரசா, குடும்பம் முதல் கார்மேல் இல்லம் வரை எல்லா இடங்களிலும், இயேசுவை ஆழமாக அன்பு செய்தார் என்றும், தனது வாழ்க்கையின் அனைத்து நிகழ்வுகளிலும், மிகவும் வேதனையான நிகழ்வுகளிலும் அவருடைய அன்பான உடன்இருப்பை உணர்ந்து ஏற்றவர் என்றும் கூறினார் கர்தினால் பரோலின்.

கடவுள் மற்றும் மனிதனைப் பற்றிய உண்மையை ஏற்றல், நம்பிக்கையைப் பாதுகாத்தல், தவறான எண்ணங்களை மாற்றிக்கொள்ளுதல், உயிர்த்தெழுந்த இயேசுவில் வெளிப்படுத்தப்பட்ட மற்றும் அணுகக்கூடிய கடவுளின்  ஆற்றலைப் புரிந்து கொள்ளுதல், கடவுளின் வாக்குறுதியை நம்புதல் போன்றவற்றிற்காக இயேசு நம்மை அழைக்கிறார் என்றும் எடுத்துரைத்தார் கர்தினால் பரோலின்.

கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் அனுபவத்திலிருந்துதான் இறந்தவர்களின் உயிர்த்தெழுதல் நம்பிக்கை பலப்படுத்தப்பட்டுள்ளது என்று வலியுறுத்திய கர்தினால் பரோலின் அவர்கள், எழுதல், உயிர்த்தெழுதல் என்பது கிறிஸ்துவுடன் என்றென்றும் வாழ்வதாகும் என்றும் எடுத்துரைத்தார்.

உயிர்த்தெழுந்தவர்களாக வாழ்வது கிறிஸ்து ஏற்படுத்திய விடுதலையை வரவேற்பது என்றும், பாடுபட்டு இறந்த இயேசுவை மிகவும் அன்பு செய்த கடவுள் காட்டும் வாழ்வின் நிறைவை வரவேற்பதாகும் என்றும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 June 2023, 13:36