தேடுதல்

ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் மைக்கிள் செர்னி. ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் மைக்கிள் செர்னி. 

ஒருங்கிணைந்த பயணத்தில் கடவுள் நம்மோடு – கர்தினால் செர்னி

மனிதர்கள் இறைத் தந்தையின் அன்பிற்குத் தகுதியானவர்களாகப் படைக்கப்படுகிறார்கள். கிறிஸ்துவின் பாடுகள், மரணம் மற்றும் உயிர்ப்பு வழியாக இந்த அன்பினாலேயே மீட்கப்பட்டார்கள்

மெரினா ராஜ் – வத்திக்கான்

உடனிருப்பின் அடையாளமாக ஒன்றிணைந்து ஒரே திருஅவையாக நடக்கவும், ஒருங்கிணைந்த சினோடல் பயணத்தில் கடவுளாகிய இயேசு நம் நடுவில் இருக்கிறார், நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார் என்று நம்பிக்கை கொள்ளவும் வலியுறுத்தினார் கர்தினால் மைக்கிள் செர்னி.

ஜூன் 3, சனிக்கிழமை காங்கோ குடியரசில் செயல்படும் மனித முன்னேற்றப் பணிகளுக்குப் பொறுப்பான துறைகளான காரித்தாஸ், நீதி மற்றும் அமைதி, கத்தோலிக்க கல்வி, சிறார் மற்றும் இளையோர் மேய்ப்புப்பணி, சுற்றுச்சூழல் மற்றும் புலம்பெயர்ந்தோர் ஆகியோர்க்கான பணித்துறையின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளைச் சந்தித்தபோது இவ்வாறு கூறினார் ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் மைக்கிள் செர்னி.

நலவாழ்வு, சிறைப்பணி உயர்அதிகாரிகள், மற்றும் தலத்திருஅவை பிரதிநிதிகளையும் சந்தித்த கர்தினால் மைக்கிள் செர்னி அவர்கள், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின்போது வெளிவந்த Gaudium et Spes, பொதுச்சங்கத்தின் பின் வந்த முன்னேற்றங்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தற்போதைய பங்களிப்பு, வறுமை, நலவாழ்வு, சுற்றுச்சூழல், கல்வி போன்றவற்றில் தற்போது எதிர்கொள்ளும் சவால்கள், நற்செய்தி அறிவிப்பு போன்றவற்றைப் பற்றியும் எடுத்துரைத்தார். 

Gaudium et Spes என்பது இறைவாக்கு ஞானம் என்று சுட்டிக்காட்டிய கர்தினால் செர்னி அவர்கள், நற்செய்தியை அறிவிக்கும் பணியில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், கிறிஸ்துவில் முழுமையாக வெளிப்படுத்தப்பட்ட இறைவனுடைய வார்த்தை, அவருடைய மாண்பிற்கான உறுதிப்பாட்டின் எழுத்து வடிவம் என்றும் எடுத்துரைத்தார்.

கர்தினால் மைக்கிள் செர்னி.
கர்தினால் மைக்கிள் செர்னி.

மனிதர்கள் இறைத்தந்தையின் அன்பிற்குத் தகுதியானவர்களாகப் படைக்கப்படுகிறார்கள் என்றும், கிறிஸ்துவின் பாடுகள், மரணம் மற்றும் உயிர்ப்பு வழியாக இந்த அன்பினால் மீட்கப்பட்டனர் என்றும் வலியுறுத்திய கர்தினால் செர்னி அவர்கள், இந்த நற்செய்தியை பூமியெங்கும் அறிவிக்க உயிர்த்த ஆண்டவரிடமிருந்து திருஅவை தனித்துவத்தைப் பெறுகிறது என்றும் வலியுறுத்தினார்.

நற்செய்தி மற்றும் மனித வளர்ச்சியை இணைக்கும் செயல்பாடுகள் பற்றி எடுத்துரைத்த கர்தினால் செர்னி அவர்கள், இரண்டிற்கும் இடையில் ஆழமான இணைப்பு இருக்கவேண்டும் என்றும், அறிவியல் அறிவும் புதிய தொழில்நுட்பங்களும் காங்கோ மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் கூறினார்

மேலும், வேலை வாய்ப்புகள், பெண்கள் மேம்பாடு, சம உரிமைகள், கல்வி, ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும், முடிவெடுப்பதில் இளைஞர்கள் அதிக ஈடுபாடு காட்ட வேண்டும், எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, அரசியல் தெரிவுகளை மேற்கொள்வதற்கு பயிற்சி  மேற்கொள்ள வேண்டும் என்றும், நாட்டின் வளர்ச்சியில் இளையோரின் பங்கு இன்றியமையாதது என்றும் வலியுறுத்தினார் கர்தினால் செர்னி.

கிறிஸ்துவுடனான சந்திப்பே, ஏழைகளுக்கான முன்னுரிமையை உருவாக்குகிறது என்றும்,  இரக்கத்தையும் ஒற்றுமையையும் மீட்டெடுத்து அவற்றை செயல்களால் வெளிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்ட கர்தினால் செர்னி அவர்கள், தனிமனிதன், சமூகம், அரசு ஆகியவற்றுக்கு இடையே பொறுப்பு, இணக்கம், உண்மையான வளர்ச்சி ஆகியவற்றை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 June 2023, 12:59