திருத்தந்தையின் பெயரால் உக்ரைன் மக்களுடன் உடனிருப்போம்
செல்வராஜ் சூசைமாணிக்கம் -வத்திக்கான்
உக்ரைனில் ஒவ்வொரு முறையும் நாங்கள் அபாய ஒலிகளைக் கேட்கிறோம் என்றும், மக்கள் வாழும் பகுதிகளில் உள்ளே நுழையும் போது, குண்டுவெடிப்பு நிகழ்வதைக் காண்கிறோம் என்றும், அந்நாட்டிற்கான தனது பயணத்தின்போது அங்கு நிகழும் சூழல்கள் குறித்து வத்திக்கான் செய்திக்குத் தொலைபேசி வழி அனுப்பியுள்ள செய்தியில் தெரிவித்துள்ளார் கர்தினால் Konrad Krajewski
உக்ரைனில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி மற்றும் ஆறுதல் மொழிகளை வழங்குவதற்காக ஆறாவது முறையாக அங்குச் சென்றுள்ள திருத்தந்தையின் பிறரன்புப் பணிகளுக்குப் பொறுப்பான கர்தினால் Krajewski அவர்கள், திருத்தந்தையின் பெயரால் நாம் இந்த மக்களுக்கு அருகில் இருக்க வேண்டும் என்றும், வார்த்தைகள் வழியல்ல, செயல்கள் வழி இதனை நாம் செய்திட வேண்டும் எனவும் அத்தொலைபேசி செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
தனது பயணத்தின்போது பங்குத் தந்தையர்களுடன் இணைந்து மக்களைச் சந்தித்ததாகவும், அவர்களுடன் உரையாடலில் ஈடுபட்டு அவர்களுக்கு, உதவிகளை வழங்கியதாகவும் கூறியுள்ள கர்தினால் Krajewski அவர்கள், தான் கடக்க வேண்டிய பயணம் இன்னும் எவ்வளவோ உள்ளன என்றும், அதில் எத்தனையோ எதிர்பாராத திருப்பங்கள், சந்திப்புகள் நிகழ்விருக்கின்றன என்றும் உரைத்துள்ளார்.
இம்மக்கள் அனைவருக்காகவும் நாம் தொடர்ந்து இறைவேண்டல் செய்வோம் என்று வலியுறுத்தியுள்ள கர்தினால் Krajewski அவர்கள், போரின் உண்மைகளுக்கு நாம் உணர்ச்சியற்றவர்களாக இருக்கக்கூடாது என்றும், தேவையில் உள்ளோருக்குத் தொடர்ந்து உதவிகளை நாம் வழங்கிட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
அண்மைய வாரங்களில், தெற்கு உக்ரேனிய நகரமான Kherson ககோவ்கா நீர்மின் அணை உடைக்கப்பட்டதன் விளைவாக 80-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின. மேலும், 20,000 ஹெக்டேர் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டதுடன் 150 டன் அளவிற்கு எண்ணெய் கசிவு ஏற்பட்டது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்