தேடுதல்

ஆயர் மாமன்ற தொடக்கத்தின் போது  ஆயர் மாமன்ற தொடக்கத்தின் போது   (AFP or licensors)

ஒருங்கிணைந்த பயணத்தில் தலத்திருஅவைகளின் தயாரிப்புகள்

ஐக்கியம் என்பது கடவுளோடும் மனித குலத்தோடும் ஒன்றிப்பின் அடையாளமாக தன் ஒளியைப் பரப்ப வேண்டும். நற்செய்திக்கு சேவையாற்றுவதில் பணிகளையும் கொடைகளையும் பகிர வேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

2021ஆம் ஆண்டு துவக்கப்பட்ட தயாரிப்புகளுடன் 2024ஆம் ஆண்டு நிறைவுற இருக்கும் ஒருங்கிணைந்த பயணம் என்ற தலைப்பிலான ஆயர் மாமன்றக் கூட்டத்தின் 16வது சாதாரண பொதுஅவைக் கூட்டம் இவ்வாண்டு அக்டோபர் மாதம் துவங்க உள்ளதையொட்டி வழிகாட்டுதல் ஏடு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

‘ஐக்கியம், பங்கேற்பு, மறைப்பணி’ என்ற தலைப்பில் இடம்பெறவுள்ள இந்த கூட்டத்திற்கு தயாரிப்பாக வெளியிடப்பட்ட இந்த ஏட்டில், இதுவரை நடந்து வந்த பாதை, ஒருங்கிணைந்த பயணத்தின் இரண்டாம் கட்டப்பாதையில் உதவும் செயல்பாட்டுக்கருவிகள் ஆகியவை விவரிக்கப்பட்டுள்ளன.

ஓர் ஒருங்கிணைந்த திருஅவையின் குணநல அடையாளங்கள், தூய ஆவியாருடன் மேற்கொள்ளும் உரையாடலுடன் முன்னோக்கிச் செல்லல், ஒருங்கிணைந்த பயணத் திருஅவையில் ஐக்கியம், பங்கேற்பு, மறைப்பணி என்பவைகளின் முக்கியத்துவம் ஆகியவைப் பற்றி விவரிக்கும் இவ்வேடு, ஐக்கியம் என்பது கடவுளோடும் மனித குலத்தோடும் ஒன்றிப்பின் அடையாளமாக தன் ஒளியை பரப்ப வேண்டும் என்றும், நற்செய்திக்கு சேவையாற்றுவதில் பணிகளையும் கொடைகளையும் பகிர்வதோடு மறைப்பணிக்கு நாம் இணைந்த பொறுப்பேற்கவேண்டும் எனவும், நிர்வாகத்திலும் அதிகாரத்திலும் பங்கெடுத்துச் செயல்படவேண்டும் எனவும் விவரிக்கிறது.

2021ஆம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் துவக்கிவைத்த உலக ஆயர் மாநாடு குறித்த தயாரிப்புகள், ஒருங்கிணைந்த பயணத்தில் தலத்திருஅவைகளில் தன் தயாரிப்புக்களை பல்வேறு நிலைகளில் முடித்துள்ளதாகவும், அவைகள் ஆயர் மாமன்றத்தின் பொதுச்செயலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் இவ்வேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த பயணத்தின் முதல்கட்டப் பாதையில், குறிப்பாக கண்டங்கள் அளவிலான கூட்டங்களில் மூன்று முக்கிய முதன்மை கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதாகவும், அது குறித்த தேர்ந்து தெளிதல் இவ்வாண்டின் அக்டோபர் மாத ஆயர் மாமன்றக் கூட்டத்தில் இடம்பெறும் எனவும் இவ்வேடு தெரிவிக்கிறது.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 June 2023, 14:27