தேடுதல்

வத்திக்கான் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள படம் வத்திக்கான் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள படம்  

‘பெண்களின் அழுகுரல்’ என்ற தலைப்பிலான புகைப்படக் கண்காட்சி

உலகின் பல்வேறுப் பகுதிகளில் இருந்து எட்டு புகைப்படக் கலைஞர்களால் எடுக்கப்பட்டுள்ள 26 புகைப்படங்கள் வத்திக்கன் மே மாத கண்காட்சியில் இடம்பெறுகின்றன.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் இடதுபுற பெருந்தூண் வளைவில் மே 2ஆம் தேதி முதல் 29வரை வைக்கப்பட உள்ள ‘பெண்களின் அழுகுரல்’ என்ற தலைப்பிலான புகைப்படக் கண்காட்சி குறித்த பத்திரிகையாளர் கூட்டம் இச்செவ்வாய்க்கிழமை மே 2ஆம் தேதி இடம்பெற்றது.

திருப்பீட செய்தித்தொடர்பு அலுவலகத்தில் இடம்பெற்ற இப்பத்திரிகையாளர் சந்திப்பின்போது, திருப்பீட சமூகத்தொடர்புத் துறையின் தலைவர், முனைவர் Paolo Ruffini, கத்தோலிக்க பெண்கள் அமைப்புகளின் உலக கூட்டமைப்பின் தலைவர், முனைவர் Maria Lia Zervino, இயக்குனரும் இக்கண்காட்சியை ஏற்பாடு செய்தவருமான முனைவர் Lia Giovanazzi Beltrami ஆகியோர் உரையாற்றினர்.

இச்சந்திப்பில் உரையாற்றிய திருப்பீடச் சமூகத்தொடர்புத் துறைத் தலைவர் Paolo Ruffini அவர்கள், ‘பெண்களின் அழுகுரல்’ என்ற பெயரில் இடம்பெறும் இந்த கண்காட்சி, சமூகத்தின் பாராமுகத்திற்கு எதிரான அழுகுரலாக இருக்கும் என எடுத்துரைத்தார்.

உலகின் பல்வேறுப் பகுதிகளில் இருந்து எட்டு புகைப்படக் கலைஞர்களால் எடுக்கப்பட்டுள்ள 26 புகைப்படங்கள் இந்த கண்காட்சியில் இடம்பெறுகின்றன எனவும், இந்தப் புகைப்படக் கலைஞர்களின் பார்வையில் இவ்வுலகைப் பார்க்க இவை உதவுகின்றன எனவும் உரைத்தார் முனைவர் பவுலோ ரூபினி.

தனிமைப்படுத்தப்படல், தவறாக நடத்தப்படல், வன்முறை போன்றவைகளை எதிர்கொள்ளும் பெண்களைப் பற்றியும் குறிப்பிட்ட திருப்பீட சமூகத் தொடர்புத்துறைத் தலைவர், ஐக்கியம், ஒன்றிணைந்த வாழ்வு மற்றும் உடன்பிறந்த உணர்வுநிலை இருக்கும் இடங்களிலேயே வாழ்வு உயிர்துடிப்புடையதாக இருக்க முடியும் என்பதையும் வலியுறுத்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 May 2023, 12:54