யூபிலி விழாவிற்கான நாள்காட்டி, இணையதளம் மற்றும் செயலி
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
2025-இல் கொண்டாடப்படவிருக்கும் யூபிலி ஆண்டிற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், திருப்பீட நற்செய்தி அறிவிப்புத்துறை அதிகாரப்பூர்வ யூபிலி நாள்காட்டி, இணையதளம் மற்றும் செயலியை வழங்கி, அதிகாரப்பூர்வ யூபிலி கீதத்திற்கான போட்டியின் வெற்றியாளரையும் அறிவித்துள்ளது.
மே 9, இச்செவ்வாயன்று, திருப்பீடச் செய்தித் தொடர்பக அலுவலகத்தில் நிகழ்ந்த செய்தியாளர் சந்திப்பின்போது, 2025-இல் நிகழவிருக்கும் யூபிலி ஆண்டிற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும், இதுவரையிலும் தீட்டப்பட்ட பல செயல்திட்டங்கள் மற்றும் செய்துமுடிக்கப்பட்டுள்ள ஆயத்தப்பணிகள் குறித்தும் திருப்பீட நற்செய்தி அறிவிப்புத் துறை எடுத்துரைத்துள்ளது.
இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த திருப்பீட நற்செய்தி அறிவிப்புத்துறையின் தலைவரும் மற்றும் இந்த யூபிலி விழா நிகழ்வுகளை ஒருங்கிணைப்பவருமான பேராயர் ரீனோ பிசிகெல்லா அவர்கள், விழா ஏற்பாடுகள் முழு வேகத்தில் நடந்து வருவதாகவும், குறிப்பிடத்தக்க அளவில் அதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்த யூபிலி விழாவிற்காக உரோமை நகருக்கு வருகை தரும் இலட்சக்கணக்கான திருப்பயணிகளின் வருகையை எளிதாக்குவதற்குத் தேவையான உள்கட்டமைப்பு பற்றி விவாதிக்க இத்தாலிய அரசு மற்றும் லாத்சியோ மாநிலத்தின் அதிகாரிகளுடனும், உரோமை நகரத்துடனும் தொடர்ச்சியான செயல்பாட்டுக் கூட்டங்கள் தொடங்கப்படவிருக்கின்றன என்றும் இதுதவிர, நான்கு திட்டக்குழுக்களும், ஒரு தொழில்நுட்பக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் பேராயர் ரீனோ பிசிகெல்லா.
உலகெங்கிலும் உள்ள மறைமாவட்டங்களை, இந்த யூபிலி விழா தயாரிப்புத் திட்டங்களில் ஈடுபடச் செய்திருப்பது கடந்த மாதங்களில் அடையப்பட்ட மற்றொரு இலக்காகும் என்றும், இத்தாலிய மறைமாவட்டங்களின் 212 பிரதிநிதிகளையும், அனைத்து ஆயர் பேரவைகளின் 90 பிரதிநிதிகளையும் பேராயர் ரீனோ பிசிகெல்லா ஏற்கனவே சந்தித்திருப்பதாகக் கூறியுள்ளது திருப்பீட நற்செய்தி அறிவிப்புத்துறை.
இத்தாலியின் மாந்துவாவைச் சேர்ந்த Francesco Meneghello, யூபிலி கீதத்திற்கான போட்டியில் வெற்றியாளராகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளதாகவும், இத்தாலிய இறையியலாளர் மற்றும் இசையமைப்பாளரான பியராஞ்சலோ செக்வேரியின் உரையை இவர் இசையமைக்க உள்ளார் என்றும் இச்செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியாளர் சந்திப்பின் சிறப்பம்சங்களில் ஒன்று யூபிலி புனித ஆண்டின் நாள்காட்டி வெளியீடாகும். இதுகுறித்து எடுத்துரைத்த திருப்பீட நற்செய்தி அறிவிப்புத்துறையின் துணைச்செயலாளரான பேரருள்திரு Graham Bell, இந்நாள்காட்டி 9 மொழிகளில் தயார்நிலையில் உள்ளது என்றும், புனித பேதுரு பெருங்கோவில் உள்பட பிற உரோமை பெருங்கோவில்களின் புனித கதவு திறப்பு நிகழ்வைப் பற்றி அறிந்து கொள்வதற்கான சில முக்கியமான உள்ளடக்கங்களையும் இந்நாள்காட்டி கொண்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்