வத்திக்கான் வளாகத்தில் மெழுகுதிரி ஏந்திய செபமாலைப் பவனி
மெரினா ராஜ் – வத்திக்கான்
மே மாதம் முழுவதும், அன்னை மரியாவை சிறப்பிக்கும் விதமாக வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் மெழுகுதிரி ஏந்திய செபமாலை பவனியும் பெருங்கோவிலினுள், மரியன்னை சிறப்பு செப வழிபாடுகள் மற்றும் திருப்பலி நடைபெற உள்ளது.
மே 6 சனிக்கிழமை முதல் 27 சனிக்கிழமை வரை உரோம் உள்ளூர் நேரம் இரவு 9 மணிக்கு நடைபெற உள்ள இந்த செபமாலைப் பவனியானது ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருவரால் தலைமையேற்று சிறப்பிக்கப்பட உள்ளது.
அவ்வகையில் மே 6 மாதத்தின் முதல் சனிக்கிழமையாகிய இன்று மெழுகுதிரி ஏந்திய செபமாலைப் பவனியானது ஆன்மிக வழிபாடு மற்றும் சடங்குகளின் ஒழுங்குமுறைக்கான துறையின் செயலர் பேராயர் Vittorio Francesco Viola அவர்கள் தலைமையில் வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நடைபெற உள்ளது.
மே 13 சனிக்கிழமை வத்திக்கான் நகர நிர்வாகத்தலைவர் கர்தினால் Fernando Vérgez Alzaga அவர்கள் தலைமையிலும், மே 20 அன்று, உலக ஆயர்கள் மாமன்றத்தின் பொதுச் செயலாளர் கர்தினால் Mario Grech அவர்கள் தலைமையிலும், மே 27 அன்று திருப்பீட அதிகாரி பேராயர் Edgar Peña Parra அவர்கள் தலைமையிலும் நடைபெற உள்ளன.
மேலும் மே மாதத்தின் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் உரோம் உள்ளூர் நேரம் மாலை 4:00 மணிக்கு, பெருங்கோவிலினுள் மாதா பிரார்த்தனைகள், மற்றும் திருப்பலியும், ஒவ்வொரு முதல் செவ்வாய்க்கிழமை வழக்கம் போல் திருநற்கருணை ஆராதனையும் நடைபெறும்.
மெழுகுதிரி பவனியுடன் கூடிய செபமாலைப் பவனி மற்றும் நற்கருணை ஆராதனை இத்தாலிய தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்