தேடுதல்

குடி நீரை எடுத்துச்செல்லும் பங்களாதேஷ் சிறுவன் குடி நீரை எடுத்துச்செல்லும் பங்களாதேஷ் சிறுவன்   (AFP or licensors)

வாழ்வின் ஆதாரம் நீர் - பேராயர் Gabriele Caccia

பொருளாதாரம், சமூகம், சுற்றுச்சூழல் ஆகிய மூன்று பரிமாணங்களில் நீரின் முக்கியத்துவத்தை நினைவுபடுத்துவதன் வழியாக நிலையான வளர்ச்சியினை அடையலாம்

மெரினா ராஜ் – வத்திக்கான்

வாழ்வின் ஆதாரமாகத் திகழும் நீர் அனைவருக்கும் கிடைக்க வேண்டிய முதன்மையான பொருளாக இருக்கவேண்டும் என்றும், பாதுகாப்பான குடிநீர், நலவாழ்விற்கான மனித உரிமைகள் போன்றவை வாழ்வதற்கான உரிமை மற்றும் மனித மாண்புடன் பிரிக்கமுடியாத வகையில் தொடர்புடையது என்றும் கூறியுள்ளார்  பேராயர் Gabriele Caccia.

மார்ச் 22 புதன்கிழமை முதல் 24 வெள்ளிக்கிழமை வரை நியுயார்க்கில் "நிலையான வளர்ச்சிக்கான நீர் - 2018-2028க்கான பன்னாட்டு நோக்கங்களை நடைமுறைப்படுத்துதல்", என்ற தலைப்பில் நடைபெற்ற இடைக்கால மறுஆய்வு குறித்த மாநாட்டில் திருப்பீடம் சார்பாக கலந்து கொண்டு பேசியபோது இவ்வாறு தெரிவித்துள்ளார் ஐ.நா.விற்கான நிரந்தர திருப்பீட பிரதிநிதி, பேராயர் Gabriele Caccia.

வரலாறு முழுவதும், வெவ்வேறு காலங்கள் மற்றும் இடங்களில், நீரின் அடிப்படை முக்கியத்துவம் கலாச்சார, சமூக மற்றும் மத மரபுகளில் பிரதிபலிக்கிறது என்றும், நீர் மீளுருவாக்கத்தின் அடையாளாமாக இருக்கிறது என்றும் கூறியுள்ள பேராயர் Caccia அவர்கள், அன்றாடவாழ்வில் நமக்குத் தொடர்ந்து தேவைப்படும் நீர் நம்மை சுத்தப்படுத்துவதோடு, வாழ்க்கையை மீட்டெடுக்க உதவுகின்றது என்றும், பெருமளவில் நீரை உடலில் கொண்டுள்ள நமக்கு நீர் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்றும் கூறியுள்ளார்.

நீரை வீணாக்குவது, அதை அலட்சியம் செய்வது, மாசுபடுத்துவது போன்ற தவறுகளை நாம் தொடர்ந்து செய்து வருகிறோம் என்றும், நீருக்கான உலகளாவிய அணுகல், அதன் நிலையான மற்றும் பொறுப்பான பயன்பாடு மேலாண்மை ஆகியவை ஒட்டுமொத்த மனிதனின் பொது நலனை அடைவதற்கு இன்றியமையாதவை என்றும் எடுத்துரைத்துள்ளார் பேராயர் Caccia.

பொருளாதாரம், சமூகம், சுற்றுச்சூழல் ஆகிய மூன்று பரிமாணங்களில் நீரின் முக்கியத்துவத்தை நினைவுபடுத்துவதன் வழியாக நிலையான வளர்ச்சியினை அடையலாம் என்று கூறியுள்ள பேராயர் Caccia அவர்கள், உலக மக்கள்தொகையில் ஏறக்குறைய பாதி பேர் இன்னும் வறுமையில் வாழ்கின்றனர் என்றும், நீர் பற்றாக்குறையால் ஏழைகள் தான் அதிகம் பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் தினமும் இறக்கின்றனர் என்றும் எடுத்துரைத்துள்ளார்.

சமத்துவமின்மையின் சூழலை நிவர்த்தி செய்வதற்கான ஒரு தொடக்கமாக நீரைப் பகுத்தறிவுடன் பயன்படுத்துதல், மற்றும் வளங்களை நிர்வகிப்பதில் அதிக பொறுப்புக்கும் ஒற்றுமைக்கும் அழைப்பு விடுத்த திருத்தந்தையின் வார்த்தைகளை நினைவுகூர்ந்த பேராயர் Caccia அவர்கள், காலநிலை மாற்றத்தின் விளைவுகள் வெள்ளம், வறட்சி, வெப்பநிலை அதிகரிப்பு, இயற்கை பேரழிவுகள் போன்ற வடிவங்களில் ஏற்படுவதால், உயிர்வாழ்வதற்கான  நீரை  பாதுகாப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 March 2023, 12:18